
செய்திகள் மலேசியா
PLIK அனுமதிக்காக மூன்றாம் தரப்பினரின் ஒப்புதல் தேவையில்லை: டத்தோ சிவக்குமார்
பெட்டாலிங் ஜெயா,
மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் குருக்கள்கள், இசை பணியாளர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர்களின் பற்றாக்குறை சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. இதை கருத்தில் கொண்டு பல ஆலயங்கள் தற்போது Pas Lawatan Ikhtisas (PLIK) பயண அனுமதியின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்களை நியமிக்க முனைந்துள்ளன.
இந்த அனுமதி, இஸ்லாமிய அல்லாத மதங்களைப் பற்றிய பணிக்காக வெளிநாட்டு நபர்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்புப் பயண அனுமதியாக மலேசிய குடிநுழைவு துறை (Jabatan Imigresen Malaysia – JIM) மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு கோயில்கள் PLIK விண்ணப்பித்தபோது, சில தனியார் அமைப்புகள் (NGO) வழங்கும் “ஒப்புதல் கடிதங்கள்” கட்டாயமாக கேட்கப்படுவதாக மலேசிய இந்து ஆலய அமைப்புகளின் பேரவை (MAHIMA) தலைவர் டத்தோ சிவக்குமார் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
“குடிநுழைவுத் துறை வெளியிட்டுள்ள விதிமுறைகள் மிக தெளிவானவை. ஆனால் கூடுதலாக, சில தனியார் அமைப்புகள் வழங்கும் ஒப்புதல் இல்லாவிட்டால், அனுமதி வழங்கப்படாமல் நிறுத்தப்படும் என்ற நடைமுறை தற்போது நிலவி வருகிறது. இதன் நோக்கம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கோயில்கள், அவர்கள் நிர்வாகிகள் மற்றும் இருப்பிடம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஏற்கனவே சங்கங்களின் பதிவிலாகாவும் (ROS), நில அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒரு கோயிலுக்குப் பணியாளரை நியமிக்க அரசு துறை விதித்துள்ள விதிகள் போதும். அதற்காக தனிப்பட்ட அமைப்புகள் அல்லது தனிநபர்கள் தரும் உறுதி கடிதங்கள் தேவையில்லை. இவை எதிர்காலத்தில் சிக்கலாக மாறலாம்,” என அவர் எச்சரித்தார்.
அண்மையில், சமூக ஊடகங்களில் பரவிய, ஒரு குருக்களின் தவறான அணுகுமுறை தொடர்பான விவகாரம் குறித்தும் சிவக்குமார் மேற்கோள் காட்டி பேசினார்.
“இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழ்ந்தால், ‘யார் அந்த குருக்களுக்கு பரிந்துரை செய்தார்?’ எனக் கேள்வி எழும். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க, அரசு விதிமுறைகளே போதுமானது,” என்றார்.
இத்தகைய சந்தர்ப்பங்களில், மூன்றாம் தரப்பினர் தலையீடு செய்யாத வகையில், குடிநுழைவுத் துறை தன் நடைமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என மஹிமா தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆலயங்கள் முழுமையான ஆவணங்களை கொண்டிருந்தால் போதுமானது மூன்றாம் நபர் தரும் உத்திரவாத கடித்ததில் பிழைகள் வர வாய்ப்பு உண்டு என டிஎஸ்கே அமைப்பின் தலைவருமான டத்தோ சிவக்குமார் சுட்டிக் காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am