
செய்திகள் மலேசியா
அர்ப்பணிப்பின் உருவம் அம்மா: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?
- பட்டினத்தார்
அம்மா…
அன்பின் தாய்,
அருள் பொங்கும் நதியாக
என்றும் சிரித்த முகமாக
நம் வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும்
தன்னை மறந்துப் பிறருக்காக வாழும் ஒற்றை உருவம். இந்த அன்னையர் தினத்தில் அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தாயின் பங்கு எண்ணற்ற ஒளிக்கீற்றுகளைக் கொண்டது.
ஒரு பிள்ளையின் முதல் ஆசான், முதல் தோழி, முதல் பாதுகாவலர் அனைத்துமே தாயாக இருக்கிறாள். அவளுடைய பாசத்துக்கும், பொறுமைக்கும், தியாகத்துக்கும் எதுவும் சமமில்லை.
“தாயிற் சிறந்த கோவில் இல்லை”
என்றார் பாரதியார். அம்மா ஒரு நிழல் இல்லை, நம்மை நிழலாய் காத்து வளர்த்த ஒளி. தன்னலமற்ற தாயின் நெஞ்சத்தை 'கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய்' என்று விளக்குகிறார் கலைஞர். தாயின் எதிர்பார்ப்பில்லாத அன்புதான் அது.
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் அம்மாவை உணர்வின்றி தவிக்க விட்டுவிடுவது மனதைக் கலங்கடிக்கிறது.
அன்பை மட்டுமே எதிர்பார்த்த அந்த தெய்வத்துக்கு நாம் செலுத்தும் “நன்றி” பணமும் பொருளும் அல்ல.
மனச்சாட்சியோடு நடந்துகொள்வதே பெரிய உபகாரம்.
இந்த அன்னையர் தினம்
அம்மாவின் அர்ப்பணிப்பை மனதில் கொண்டு, அவரது கால்களில் நம் நன்றியைச் சமர்ப்பிப்போம்.
அன்றாட வேலைப்பளுவில் மறந்துவிடும் “நன்றி” என்ற வார்த்தையை தாயிடம் சொல்லும் சிறந்த வாய்ப்பு இது.
அன்னையர் தினம் என்பது பரிசுகளைக் கொடுப்பதற்கான நாள் மட்டும் அல்ல; தாயின் கண்ணில் புன்னகையை வரவழைக்கும் அன்பான சொற்களைச் சொல்லும் சிறப்பான நாளாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு, தாயின் பாசத்திற்கு ஒரு நாள் போதாது என்றாலும், அன்னையர் தினம் நம்மை அவர்களிடம் நன்றி கூற வைக்கும் ஒரு இனிய சந்தர்ப்பமாகிறது.
தாயின் பாசத்துக்கு தலைவணங்கி, அன்னையர் தின நல்வாழ்த்துகள் என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்