
செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் தெரு நாய்கள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுக் கருணை கொலை செய்யப்படும்: அமினுடின் ஹருன்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் தெரு நாய்கள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுக் கருணை கொலை செய்யப்படும் என்று ஆஆஆஈளா மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் கூறினார்.
இந்த நடவடிக்கை பொறுப்பற்ற, முறையற்ற நிலைகளில் மேற்கொள்ளப்படாது.
மாறாக, உரிய அதிகாரிகள் பொறுப்பாக சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுக் கருணை கொலை செய்யப்படுவதை உறுதி செய்வார்கள் என்றும் அமினுடின் தெரிவித்தார்.
சட்ட நடைமுறை என்றால் தெரு நாய்களை மனிதாபிமானமில்லாமல் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது அல்ல.
விலங்குகள் தொடர்பான சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று அமினுடின் விளக்கமளித்தார்.
கட்டுப்பாடற்ற தெரு நாய்களின் தொல்லைகளைத் தீர்க்க ஒவ்வொரு மாநகர மன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்றார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை மாநில சட்டமன்றக் கூட்டத்தில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தெருநாய்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.
இருப்பினும், இந்த திட்டம் சில தரப்பினரிடமிருந்து, குறிப்பாக அரசு சாரா அமைப்புகளிடமிருந்து (NGO) விமர்சனங்களைப் பெற்றது.
அவர்கள் இந்த முடிவை உணர்ச்சியற்றதாகவும் மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முரணாகவும் கருதினர்.
தெருநாய்களால் மக்கள் காயமடைவது உட்பட, குடியிருப்பாளர்களிடையே அதிகரித்து வரும் புகார்கள் மற்றும் பாதுகாப்பு அச்சங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தத் திட்டம் வந்ததாக அமினுடின் விளக்கினார்.
மேலும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்குள் தெருநாய்கள் தாராளமாக நுழைந்து மலாய் குடியிருப்புப் பகுதிகளில் தொந்தரவுகளை ஏற்படுத்துவதாக மாநில அரசுக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை