நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படலாம்: அமிருடின் ஷாரி

சுபாங் ஜெயா:

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் இன்று வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கான விடையை இந்த அறிக்கை அளிக்கும் என கருதப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கான தொழில்நுட்பக் காரணங்கள், அலட்சியம் அல்லது குற்றவியல் கூறுகளுக்கான சாத்தியத்தையும் ஹூசேன் தெளிவுபடுத்துவார் என்று அமிருடின் குறிப்பிட்டார். 

தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான விசாரணையைப் பொதுப்பணித் துறை, வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, பெட்ரோனாஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப அமைப்புகள் நடத்தும் வேளையில் அலட்சியப் போக்கு, குற்றவியல் தன்மை குறித்து காவல் துறை விசாரணை நடத்தும் என்றுஅவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொலிகளையும் விசாரணைக் குழு ஆய்வு செய்யும். அவசியம் ஏற்பட்டால் உறுதிப்படுத்துதல் நடவடிக்கைக்காக அந்தப் பதிவுகளைப் பதிவேற்றம் செய்தவர்களைக் காவல்துறை அழைக்கும் என்றார் அவர்.

பாதுகாப்புச் சோதனைகள் முற்றுப் பெற்றவுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் கூறிய அமிருடின், அங்குப் பாதிக்கப்பட்ட 85 வீடுகள் வசிப்பதற்கு பாதுகாப்பானவை என உறுதிசெய்யப்பட்ட நிலையில் குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

அந்தத் தீச்சம்பவத்தில் 87 வீடுகள் குடியிருக்க முடியாத அளவுக்கு முழுமையாக அழிந்து போனது மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் சோதனையில் கண்டறியப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset