நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியலையும், தலைமைத்துவத்தையும் காரணம் காட்டி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தையும் தாரை வார்த்து விட வேண்டாம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து நமக்கென்று இருந்த அமைச்சர் பதவியை இன்றைய நடப்பு அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் விட்டுக் கொடுத்து விட்டோம்.

ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்து இப்போது இருக்கின்ற பினாங்கு இந்து  அறப்பணி வாரியத்தையும் தாரை வார்த்து விட வேண்டாம்.

அரசியலையும், தலைமைத்துவத்தையும் காரணம் காட்டி இருக்கின்ற ஒன்றிரண்டு உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட வேண்டாம் என ராயர், டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோரை மஇகா துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.

ஆண்டாண்டு காலமாக நமக்கு இருந்த அரசியல் பதவியில் இருந்து,  மற்ற சலுகைகள் அனைத்தும் காணாமல் போயின.

இந்தியர்கள் மத்தியில் பெரு வாரியாக தமிழர்கள் வாழும் இந்நாட்டில் அதிகமான பிரச்சனை தமிழர்களைச் சார்ந்தே இருக்கின்றது. 

எனவேதான் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க  ஒரு தமிழர் அமைச்சராக இருப்பது மிக மிக அவசியம்.

என் இனத்தின் மொழி அறிந்த ஒருவருக்குத்தான், என் இனத்தில் வலி தெரியும். 

ஆக என் மொழி தெரிந்த தமிழர் ஒருவர் அமைச்சர் பதவியில் இருந்தால் மட்டுமே பெருவாரியாக இருக்கும் தமிழர்களின் பிரச்சனைகளை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து தீர்க்க முடியும்.

ஆனால் இன்றைய நடப்பு அரசியலில் 
தமிழர்களுக்குக் குரல் கொடுக்கத், தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க, ஒரு தலைமைத்துவம் இல்லாத சூழலில், பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கி வருகிறோம். 

நாளுக்கு நாள் இதை நாம் கண்கூடாகப் பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம். இந்த சூழலில் இறுதியாக நம்மிடம் இருப்பது தன்மானமும், இந்து சமய அறநிலையத்துறை பதவியுமே. 

இதையும் அரசியல் காரணங்களைக் காட்டி விட்டுக் கொடுத்து விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

பினாங்கில் தமிழர்கள் வழிபடும் இந்து ஆலயங்களே அதிகமாக உள்ளன. எனவே பினாங்கு இந்து அறப்பணி வாரிய பதவியையும் கைவிட்டுவிட வேண்டாம் என ஜசெக கட்சியைக் கேட்டுக் கொள்கிறேன். 

குறைந்தபட்சம் இதையாவது தமிழர்கள் தலைமைத்துவத்தில் இருப்பதை ஜசெக கட்சி உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் நம்மிடையே உள்ள விரிசல் இன்னும் அதிகமாகிவிடும். 

ஆக நிதானமாக யோசித்து நம் இனத்திற்கு எது சரி என்பதைப் புரிந்து செயல்படவும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset