நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

Laapataa Ladies திரை விமர்சனம்

முகத்தை மறைக்கும் பெண்களை நீங்கள் பார்த்திருக்கிறீகளா? அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாதே தவிர, அவர்களால் மற்றவர்களை வசதியாகவே பார்க்க இயலும்.

அப்படியிருக்க, ஒரு பெண் தான் விரும்பி தொலைந்தால்தான் உண்டே தவிர, முகம் மறைந்திருப்பதால் தவறுதலாக தொலைந்துவிடமாட்டாள். அவள் முகம் மறைக்கப்படுவதற்கும், மறைக்க வேண்டுமென்று வற்புடுத்தப்படுவதற்குமான காரணமே பெண்ணுக்கென்று ஒரு தனி அடையாளம் எந்தக் காலக்கட்டத்திலும் அவளுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதால்தான்.

அவள் இன்னாருடைய மனைவி என்றோ, மகள் என்றோ, தாய் என்றோ, சகோதரி என்றோ, தோழி என்றோ அடையாளம் காட்டப்பட வேண்டுமென்றே இந்த ஆணாதிக்க சமுதாயம் துடிக்கின்றது. அவளை தங்கள் கண்காணிப்பில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது  ஆண்களுக்கு பெருமையாகின்றது.

முகம் மறைத்திருந்ததால் வேறொருவரின் மனைவியை தன் மனைவியென்று மாற்றி வீட்டுக்கு அழைத்து செல்வதில் தொடங்குகிறது ‘லாப்பத்தா லேடீஸ்’ திரைப்படம். 

முகம் மறைத்த புதுமணப் பெண் புஷ்பா ராணி என்கிற ஜெயா வேண்டுமென்றே வேறு மாப்பிள்ளையோடு சென்று விடுவதும், தன் மனைவி ஃபூல் என்று நினைத்து தீபக் புஷ்பாவை வீட்டுக்கு அழைத்து வருவதும், தன் கணவர் பெயரையும் உச்சரிப்பது தவறு என்று நினைக்கும் ஃபூல்லின் நிலையும், என்று வித்தியாசமாக கதை விரிகிறது. 

இப்படத்தின் இயக்குநர் கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்று படத்தைப் பார்க்கும்போதே நினைத்தேன்.

ஆம், படத்தின் இயக்குநர் கிரண் ராவ். அதேபோல் ஒவ்வொரு வசனமும் அவ்வளவு நேர்த்தியாக, பொருத்தமாக பொட்டில் அறைந்தாற்போல் ஆணாதிக்க சமூகத்திற்கு சொல்வதால் இதனையொரு பெண் தான் எழுதியிருக்க முடியுமென்று எண்ணினேன். சினேகா தேசாய் மற்றும் திவ்யாநிதி ஷர்மா என்று ஒன்றல்ல இரண்டு பெண்கள் சேர்ந்து திரை வசனங்களை எழுதியுள்ளனர்.

இச்சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை நகைச்சுவையாக சொல்லி செல்வதால் பிரச்சார நெடி இல்லாமல் பலருக்கு இக்கருத்துக்களை கடத்திச் செல்வதாலேயே இவர்களை பாராட்டலாம். அதுவும் ஆமீர் கான் கால் பதித்தாலே

அதன் பின்னணி சிறப்பாகதானே இருக்கும்? அவர் தயாரித்தப்படம் வேறு எப்படி இருக்கும்? 

இரண்டு வேறுபட்ட பண்புகளையும் மனோபாவத்தையும் கொண்ட பெண்களின் கதை. ஃபூல் மற்றும் புஷ்பா - இரண்டும் பூவைக் குறிக்கும் ஹிந்தி வார்த்தைகள். ஃபூல்லுக்கு, தான் செல்லும் கிராமத்தின் பெயரைக் கூட சொல்ல தெரியாத, தகவல் அறியாத அறியாமையில் மூழ்கியவர். புஷ்பாவோ எல்லாம் தெரிந்தும் தன் கல்வி லட்சியத்திற்காக வேண்டுமென்றே தவறான தகவலைத் தரக்கூடியவர். 
இப்படத்தில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், பெண் கல்வியின் இன்றியமையாமை, ஒரு பெண்ணால் தனித்து நின்று எல்லாம் சாதிக்க முடியும் ஆனால் அதனை அவளே நம்ப மறுக்கிறாள் என்ற கருத்து, பெண்களின் சுய மரியாதை பற்றி, வட இந்தியாவின் பின் தங்கிய நிலை, இன்னும் நிலவும் வரதட்சணை கொடுமை, அரசியல் மாற்றங்களின்போது கிராமங்களின் பெயர்களும் மாறுவது என்று போகிறப் போக்கில் பல்வேறு அருமையான கருத்துக்களை நிறுவிச்செல்கிறது திரைக்கதை. 

இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா (தீபக்), நிதான்ஷி கோயல் (ஃபூல்), பிரதிபா ரந்தா (புஷ்பா ராணி) மட்டுமல்லாது, மாமியார், மூத்த மருமகள், சோட்டு, குறிப்பாக டீ கடை மஞ்சு மாய், போலீஸாக வரும் ரவி கிஷன் என்று ஓவ்வொரு கதாபாத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளனர்.

செல்பேசிகளை வரதட்சணையாக வாங்கும் காலமான 2001-இல் உள்ள கதையாக அமைந்தாலும் அது இருபது வருடம் கழித்தும் பொருந்துவதை வேதனையாக உணர் முடிகிறது. ஆனால் வலுவான கதையை மிக லேசாக சொல்லிச் செல்வதால் தொலைந்து போகாமல் மனதில் நிற்கிறது ‘லாப்பத்தா லேடீஸ்’.

எனக்கென்னவோ இதே முகம் மூடிய கதாபாத்திரங்கள் இஸ்லாமியப் பின்னணி கொண்ட நிக்காப் அணிந்த பெண்களின் கதையாக இருந்தால் எவ்வளவு விபரீதங்கள் நிகழ்ந்திருக்குமென்று விபரீதமாகவே யோசிக்க முடிகிறது.  

குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம்தான். பார்த்துவிட்டு என் கருத்தோடு ஒத்துப்போகிறீர்களா என்று சொல்லுங்கள்.

#LaapataaLadies #moviereview #tamil

- திரைவிமர்சனம்: ஜஸீலா பானு

தொடர்புடைய செய்திகள்

+ - reset