நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பின் இரவு நேர உணவின் எதிர்மறை விளைவுகளை நிரூபிக்க போதுமான சான்றுகள் உள்ளன; மக்கள் நலனை முன்வைத்து சுகாதார அமைச்சு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 

பினாங்கு::

உணவகங்கள், உணவகங்களுக்கான 24 மணிநேர உரிமங்களை ரத்து செய்வதற்கான பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் வேண்டுகோளை  கவனமாக ஆய்வு செய்ய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃபிளி அஹ்மதின் அறிவிப்பை பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  வரவேற்பதாக அதன் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

முடிவெடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

24 மணி நேர உணவக உரிமங்களை ரத்து செய்வது என்பது  உணவகங்களை மூடுவது என்று பொருள் அல்ல.

 நாங்கள் கூறுவது என்னவென்றால், பின் இரவு நேர உணவைத் தவிர்ப்பதற்காக அவற்றின் இயக்க நேரத்தை ஒழுங்குபடுத்துவதாகும் என்றார் முஹைதீன்.

பங்குதாரர்களுடன் கலந்தாலோசிப்பது ஒரு நல்ல நடவடிக்கையாக இருந்தாலும், மலேசியப் பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் தாமதமாக அதிக உணவை உட்கொள்வது நமது உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரியான நேரத்தில் உணவு உண்டால் நமது தூக்கம், பசி, ஹார்மோன்களை உடல் ஒழுங்குபடுத்துகிறது.

நேரம் கெட்ட நேரத்தில் உணவு உட்கொள்வதால் நமது உடல் அமைப்பு சீர்கேடான நடவடிக்கை உட்படுகிறது. ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படுவதோடு தூங்குவதை மிகவும் கடினமாக்குகிறது.

ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆய்வாளர்களின் புதிய ஆய்வில், நாம் சாப்பிடும் போது நமது ஆற்றல் செலவினம், பசியின்மை, கொழுப்பு திசுக்களில் உள்ள மூலக்கூறு பாதைகள் ஆகியவற்றை கணிசமாக பாதிக்கிறது என்கிறது.

 நான்கு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நமது பசியின் அளவு, சாப்பிட்ட பிறகு கலோரிகளை எரிக்கும் விதம் மற்றும் நம் உடலில் கொழுப்பை சேமிக்கும் விதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்றார் முஹைதீன்.

தாமதமாக சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம், உடல் கொழுப்பு, பலவீனமான எடை இழப்பு  ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி அறிக்கை கூறுகிறது.

மலேசியர்களில் பெரும்பாலோர் அதிக உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர். அதனால் நீரிழிவு, புற்றுநோய், பிற  நாட்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. 

சமீபத்தில், துணை சுகாதார அமைச்சர், கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மலேசியர்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய அல்லது நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என்று எச்சரித்திருந்தார்.

மலேசியாவில் நீரிழிவு நோய்க்கான வருடாந்திர நேரடி மருத்துவச் செலவுகள் மவெ4.4 பில்லியன் ஆகும், புற்றுநோயை விட 227 சதவீதம் அதிகம் (மவெ1.3 பில்லியன்) மற்றும் இருதய நோய் (மவெ3.9 பில்லியன்) விட 11 சதவீதம் அதிகம்.

நாட்டில் தொற்று அல்லாத நோய்களை  சமாளிக்க ஆண்டுதோறும் 9.65 பில்லியன் ரிங்கிட் செலவிடப்படுகிறது.

உணவகங்களின் இயக்க நேரத்தைக் குறைப்பது மலேசியாவில் நோய்களின் பிரச்சினையை முழுமையாக தீர்க்காது என்றாலும், மலேசியர்களிடையே பின் இரவு நேர உணவு உண்பதைக் கணிசமாகக் குறைக்கும்.

இது அவர்களின் மேம்பட்ட சுகாதார நிலை மற்றும் நோய்களை குறைக்க வழிவகுக்கும்.

24 மணி நேர உணவு விற்பனை நிலையங்கள் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்ற வாதம் ஏற்புடையதல்ல.

அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத்தான் வேலைக்கு அமர்த்துகின்றனர். உள் நாட்டு இளைஞர்கள் இரவு நேர வேலைக்கு வர விரும்புவதில்லை.

மக்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உணவு விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கமும் சுகாதார அமைச்சும் முனைப்பு காட்டவேண்டும். 

மக்கள் நலனை முன்வைத்து சுகாதார அமைச்சு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதாரப் பிரச்சினைகளைக் கையாளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் சுகாதார அமைச்சர் ஆலோசனை கேட்க வேண்டும் என்று  பி.ப.சங்கம் கேட்டுகொள்வதாக முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset