நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவையும் இந்திய சமுதாயத்தையும் திறம்பட வழிநடத்திய துன் சாமிவேலு ஒரு சகாப்தம்: டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மஇகாவையும் இந்திய சமுதாயத்தையும் திறம்பட வழிநடத்திய ஒரு வரலாற்று நாயகன் துன் டாக்டர் ச. சாமிவேலு என்று மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

ம.இ.கா  வரலாற்றில்  1979 முதல் 2010 வரையில் ஒரு முக்கியமான காலகட்டம். 

நமது கட்சியையும் இந்திய சமுதாயத்தையும் 31 ஆண்டுகளுக்கு பல்வேறு போராட்டங்களுக்கிடையில்  திறம்பட வழிநடத்தியவர் துன் சாமிவேலு அவர்கள் என்று மார்ச் 8இல் அவரது பிறந்தநாளில் நினைவுகூர்ந்துள்ளார்.

கடந்த காலங்களில் அவரின் பிறந்த நாளை அவருடன் ஒன்றாக இணைந்து கொண்டாடிய நாம் இன்று அவர் நம்மிடையே இல்லாத சூழ்நிலையில் சோகத்துடன் அவரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளோம்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கும் அவருக்குமான தொடர்பு இரண்டு தலைமுறைகளைக் கொண்டது. எனது தந்தையார் அமரர் சன்னாசி துன் சாமிவேலுவின் தீவிர ஆதரவாளராகத் திகழ்ந்தார். 

என் குடும்பத்தினர் அனைவரும் துன் அவர்களின் தீவிர ஆதரவாளர்களாக அரசியலில் வலம் வந்தோம்.
எனது தந்தையார் இளம் வயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்தார். 

என்றாலும் எங்களின் குடும்பம் தொடர்ந்து துன் சாமிவேலு அவர்களுக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்து வந்தது. அவரும் எங்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டினார்.

எனது கல்வி முன்னேற்றத்திற்கும் துன் பெருமளவில் துணை நின்றார். இளம் வயதில் நான் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டியபோது எனக்கு அரசியல் குருவாக அமைந்து என்னை வழிநடத்தினார். கட்சியில் இளைஞர் பகுதித் தலைவராக செயல்பட வாய்ப்புகள் வழங்கினார்.

கடந்த 2004ஆம் ஆண்டில் நான் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு வழங்கி எனக்கு உறுதுணையாக இருந்தார். 

பின்னர் அரசாங்கத்திலும் நான் நாடாளுமன்றச் செயலாளராக செயல்பட வாய்ப்பளித்தார்.

நான் பலமுறை ஏற்கனவே கூறியிருக்கிறேன். இன்று நான் மஇகாவின் தேசியத் தலைவராக மக்கள் முன் நிற்பதற்கு முழுமுதற் காரணம் துன் அவர்கள்தான் என்றால் அது மிகையில்லை.

அதுமட்டுமல்ல இன்று நம் கட்சி எத்தனையோ போராட்டங்களுக்கிடையிலும் வலிமையுடனும், மக்கள் ஆதரவுடனும் திகழ்வதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவரும் அவர்தான்.

நம் இந்திய சமுதாயமும் யாரையும் அண்டி நிற்காமல் சொந்தக் காலில் நின்று பல்கலைக்கழக உயர் கல்வி பெறவும், நிதிச் சிக்கலால் நம் சமுதாய மாணவர்களின் கல்வி தடைபட்டு விடாமல் தொடர்வதற்கும், துன் அவர்கள் அமைத்துத் தந்த எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் ஆகியவைதான் நமக்கு இன்று முக்கிய நிதி ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

துன் சாமிவேலு இன்று நம்மிடையே இல்லாத சூழலிலும் அவரின் பிறந்த நாளை நாம் நினைவு கூர்வது நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையும், அவரின் பங்களிப்புக்கு வழங்கும் கௌரவமும் ஆகும்.

அவர் இல்லாத வெறுமையை நாம் உணர்ந்தாலும், அவரின் இனிய நினைவுகளோடு, அவரைப் போன்றே, நமது கட்சியின் அரசியல், சமுதாயப் போராட்டத்தை என்றும் முன்னெடுப்போம் என இந்த வேளையில் நாம் உறுதி கொள்வோம் என்று டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset