நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவிஞர் சீனி நைனா முகம்மதுவை இஸ்லாமியர், மதமாற்றுக் கும்பல் என இழிவாக பேசுவதா? மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டனம் 

கோலாலம்பூர்: 

கவிஞர் சீனி நைனா முகம்மதுவை இஸ்லாமியர், மதமாற்றுக் கும்பல் என இழிவாக பேசும் குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் வண்மையாகக் கண்டிக்கிறது என்று அதன் தலைவர் ஞான சைமன் கூறினார்.

தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு ஒருவர் எழுந்து நிற்காததைக் கண்டித்து பல இயக்கங்களும், தனி நபர்களும் குரல் கொடுத்ததை முன்னிட்டு குரல் பதிவு ஒன்று பரவி வருகிறது. 

அதில் மதமாற்றுக் கும்பலால் இந்த பாடல் தயாரிக்கப்பட்டது எனவும், தமிழ்வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்கத் தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்தப் பாடல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தயாரிப்பு என்பதால் இந்த குரல் பதிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

கடந்த 2007 இல் கரையைத் தேடும் அலைகள் நூல் வெளியீட்டில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மலேசியாவிற்கென்று தனியாக தமிழ்வாழ்த்துப் பாடல் அவசியம் என்று கருத்துரைத்தார். 

அதற்கு முன்னர் நாவல் போட்டி பரிசளிப்பில் தமிழ்வாழ்த்து பற்றிய தனது எண்ணத்தை அன்றைய தலைவர் இராஜேந்திரனும் முன் வைத்தார்.

தமிழகம் கடந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றியும், சங்க கால இலக்கியம் தவிர்த்து நவீனயுகத்தின் இணையம் வழியும் தமிழ் ஊடுருவி உள்ளதை உள்ளடக்கிய தமிழ்வாழ்த்து வேண்டும் என்ற நோக்கத்தில் நமக்கென்று ஒரு தமிழ் வாழ்த்து தயாரிக்கப்பட்டது.

இந்த தமிழ்வாழ்த்துப் பாடலை இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது எழுதினார். 
ஆர்.பி.எஸ் இராஜு இசையமைத்த இந்த பாடலை துருவன், பாபு லோகநாதன் ஆகியோர் பாடினர்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தயாரித்த இப்பாடல் கடந்த 2009இல் டத்தோ வி.எல்.காந்தன் தலைமையில் அதன் அறிமுக விழா நடைபெற்றது. 

இந்தப் பாடலுக்கான காட்சி உருவாக்கபட்டு தற்போது மீண்டும் வெளியீடு காணத் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் தமிழ்வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்கத் தேவையில்லை, அது ஒன்றும் தேவாரம் அல்ல என கூறுகின்றனர்.

இது முற்றிலும் தப்பான ஒப்பீடு. ஜாதி, மதம் கடந்து நம்மை இணைப்பது நம் தாய்மொழியான தமிழ்மொழிதான். 

அதுவும் செம்மொழியான நமது தமிழ்மொழி வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டியது நமது கடமை. 

வேற்று இனத்தவர் தமிழ்வாழ்த்துப் பாடலைத் தடுத்தார் என போர்க்கொடி தூக்கினோம். 

இன்று நாமே தமிழ் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் எழுந்து நிற்கத் தேவையில்லை என்ற கூற்றை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

தேவாரப் பாடலுக்கு எழுந்து நிற்கலாம், தமிழ்வாழ்த்துக்குத் தேவையில்லை என்பது அறிவின்மையைக் காண்பிக்கிறது. 

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, பஹாய் இப்படி இன்னும் பல மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 

ஆனால் தமிழ் மொழியைப் போற்றுபவர்களாக இருப்பார்கள். ஆக தமிழ்சார்ந்த நிகழ்ச்சியில் பல மதத்தவர்கள் இருக்கும்போது தேவாரம் மட்டும் பாடுவது முறையல்ல. 

ஆனால் அனைவருக்கும் பொதுவான தமிழ்வாழ்த்து பாடுவதும், அதற்கு மரியாதை செலுத்துவதும் நமது கடமை.

மேலும் இஸ்லாமியர், மதமாற்றுக் கும்பல் என கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களை இழிவாகப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்

தமிழ்கூறும் நல்லுலகம் போற்றக்கூடிய ஓர் இலக்கியவாதி, கவிஞர் அவர்களை தப்பாகச் சித்தரிப்பது ஏற்றுக் கொள்ளப்படாது. 

அது வன்மத்தின் உச்சமாகக் கருதப் படுகிறது. தங்களது செயலை நியாயப்படுத்த அவதூறு பேசுவது கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது ஞான சைமன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset