
செய்திகள் சிந்தனைகள்
இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது நினைவு நாள் - அவர்களின் தமிழ்ப்பணி ஒரு பார்வை
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என்பது வான்புகழ் வள்ளுவனின் அமுதவாக்கிற்கேற்ப வாழ்ந்தவர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக, உலகத் தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஐயா தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதுவும் குறிப்பிடத் தக்கதாகும்.
ஐயா அவர்கள், ‘தேன்கூடு’, ‘நல்ல தமிழ் இலக்கணம்’, ‘புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’, ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’, ‘உங்கள் குரல்’, ‘கவிதைப் பூங்கொத்து’, ‘தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்’ முதலிய சிறப்புமிகு நூல்களைத் தமிழ் உலகிற்கு அளித்தவர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள். ஐயா அவர்கள், மலேசியத் தமிழ் மண்ணில் தொல்காப்பியச் சிந்தனை விதையைத் தூவியவராவார். கவிதை வகுப்புகள், சொற்பொழிவுகள், இலக்கண இலக்கியப் பட்டறைகள் எனத் தம் தமிழ்ப்பணிக்கு எல்லையே இல்லாமல் தொண்டாற்றியவர். தமிழ் ஊடகங்களில் அவருடைய தமிழ்ப் படைப்புகள் நாடோறும் அலங்கரித்த வண்ணம் இருக்கும்.
மேலும், தொல்காப்பியச் செம்மல் எனப் போற்றப்பட்ட ஐயா அவர்கள் தொல்காப்பியத்தில் கரை கண்டவர். அத்துடன், தமிழ் இலக்கணத்தைத் தொல்காப்பிய அடிப்படையில் ஆய்ந்து அறிந்தவர். தாம் பெற்ற தமிழறிவை மலேசியத் தமிழர்களும் பெறவேண்டும் என அயராது பாடாற்றினார். ஐயா அவர்கள், அதற்காக மலேசியாவின் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு தமிழாசிரியர்கள், நாளிதழ் நிருபர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரின் தமிழ் அறிவுக் கண்களைத் திறந்து வைத்தார். அதில் குறிப்பிடத்தக்க மாநிலம் ஜொகூர் மாநிலமாகும். ஜொகூர் மாநிலத் தமிழாசிரியர்களின் தமிழறிவிற்கு ஐயா உரமிட்டார். வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் ஆசிரியர்களுக்கு மிகச் சிக்கலாகவே பன்னெடுங்காலமாய் விளங்கியது. இதற்குத் தொல்காப்பிய அடிப்படையில் எளிமைப்படுத்தித் தீர்வு கண்டவர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள்,
மேலும், மலேசியத் தமிழ் ஊடகங்களில் நல்ல தமிழ் நடைபயில வழியமைத்தவரும் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள்தான். ‘சுழியம்’ என்ற தமிழ்ச்சொல் இருக்க ஏன் ‘பூஜியம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் எனக் கடிந்தார். அதுமட்டுமல்லாது, ‘செய்திகள் வாசிப்பவர்’ என உயர்திணையில்தான் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதுபோன்று நல்ல தமிழ் புழங்க ஐயா அவர்கள் அரும்பாடுபட்டார்கள்.
அத்துடன், காலந்தோறும் தமிழில் பிழையாய்ப் பேசிப் பழகிப்போன தமிழ் மக்கள் அதுவே சரியெனப் பின்னாளில் ஏற்றுக் கொண்டதை ஐயா அவர்கள் தமது படைப்புகளின் மூலம் தெளிவுபடுத்தினார். இதற்கு, ‘ஊடகத்தில் வாடும் தமிழ்’ நல்லதொரு எடுத்துக் காட்டாகும். தமது கைவண்ணத்தில் மலேசிய மண்ணில் தடம் பதித்த ஐயா அவர்களின் ;உங்கள் குரல்’ மாதிகையின் ஒரு பகுதியாக மேற்சொன்ன பகுதி இடம்பெற்றுத் தமிழில் மேலும் தெளிவை உலகிற்குப் பறைசாற்றினார்.
இவைமட்டுமின்றி, ஐயா அவர்கள், தமிழாசிரியர்களுக்கு ஐந்தாம் படிவத் தமிழ் இலக்கியப் பாடத்தைப் பட்டறைகளின் வழி எளிமையாக விளக்கம் தந்து ஆசிரியர்களுக்கு இலக்கியத்தின்பால் ஆர்வம் ஏற்படவும் வழிவகுத்தார்.
அதுமட்டுமின்றி, ‘காப்பியனை ஈன்றவளே’ என்னும் மலேசியத் தமிழ் வாழ்த்துப்பாடலை இயற்றி பெருமை சேர்த்தவரும் ஐயா அவர்களே!. இவ்வாழ்த்துப் பாடல் இன்று மலேசியத் திருநாட்டில், பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கின்றது. இலக்கணச் செறிவும் தமிழ் வரலாறும் தமிழர் பெருமையும் ஒருங்கே மிளிர்ந்து அப்பாடலுக்கு இனிமை சேர்த்துள்ளதை எண்ணி நாளெல்லாம் வியக்கலாம். அவ்வாழ்த்துப் பாடலின் முதற்கண்ணி பின்வருமாறு அமைகின்றது.
‘காப்பியனை ஈன்றவளே
காப்பியங்கள் கண்டவளே!
கலை வளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
இவ்வாறு தமது தமிழ்ப்பணியைச் செவ்வனே ஆற்றி தமிழ்ப்பால் பெருக்கெடுத்த வேளையில் ஐயா அவர்கள் திடீரென இயற்கை எய்தினார். இத்துயரச் செய்தி அவருடைய மாணவர்கள் மட்டுமின்றி தமிழ்ப்பற்றாளர்கள் பலரின் உள்ளத்தை மின்னல் தக்கியதுபோல் துன்பக் கடலில் தவிக்கவிட்டது.
ஆக்கம் :
தமிழாசிரியர் முனைவர் இரவிசந்திரன் சுப்பிரமணியம்
ஸ்கூடாய், ஜொகூர், மலேசியா.
மேற்கோள் நூல்கள் :
1. சீனி நைனா முகம்மது, (2015), தொல்காப்பியக் கடலின் ஒரு துளி,
உங்கள் குரல் எண்டர்பிரைசு, மலேசியா.
2. முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை, (2017), இலக்கிய ஆய்வில் ஒரு துமி!,
மை ஸ்டோரி எண்டர்பிரைசு, மலேசியா.
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am