
செய்திகள் மலேசியா
என்னது? தடுப்பூசி போட்டால் டுரியான் சாப்பிடக் கூடாதா?: தெளிவுபடுத்திய அமைச்சர்
கோலாலம்பூர்:
தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் டுரியான் பழங்கள் சாப்பிட்டால் இறந்துபோக நேரிடும் என்பது தவறான கூற்று என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஸ்ஸாலி Dr Noor Azmi Ghazali தெரிவித்துள்ளார்.
இந்த கூற்றுக்கு மருத்துவ ரீதியில் எந்தவித ஆதாரங்களும் இல்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் டுரியான் சாப்பிட்டதை அடுத்து இறந்து போனதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது. இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே துணை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"எந்தவொரு மருத்துவப் புத்தகத்திலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் டுரியான் பழங்களைச் சாப்பிடக் கூடாது என்று குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்து மக்கள் சீனி (சர்க்கரை) அதிகம் உள்ள உணவுகளையும், அதிகப்படியான இனிப்பு நிறைந்த பானங்களையும் தவிர்த்தல் நல்லது. ஏனெனில், அவை நமது உடல்நலனுக்கு எதிரான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
"சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்ட ஆடவர் மாரடைப்பால்தான் காலமாகி உள்ளார். இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசிக்குப் பின்னர் அவர் துரியான் சாப்பிட்டதற்கும் அவர் இறந்து போனதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
"எனவே, இது தொடர்பான தகவல் உண்மை அல்ல. தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைப் பகிர வேண்டாம். எந்தத் தகவலாக இருந்தாலும், அது உண்மையா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மக்கள் மத்தியில் வீண் அச்சங்கள் ஏற்படும். இது போன்ற தகவல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய அறிவியல்பூர்வமான விளக்கங்களையும் உரிய தரவுகளையும் வெளியிடும்," என்று துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஸ்ஸாலி மேலும் கூறினார்.