
செய்திகள் மலேசியா
முந்தைய ஏற்பாடுகளின்படி போதுமான தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும்: கைரி ஜமாலுதீன்
கோலாலம்பூர்:
ஏற்கெனவே செய்துள்ள ஏற்பாடுகளின்படி மலேசியாவுக்கு ஏராளமான தடுப்பூசிகள் வந்து சேரும் என தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"தடுப்பூசி போடுவதற்கான இலக்குகள் அவற்றின் விநியோகத்தைப் பொறுத்தே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே அனைவரும் அமைதி காக்க வேண்டும் (Tranquilo, relax). நமக்கான தடுப்பூசிகள் வரவுள்ளன.
"தடுப்பூசிகள் வந்தடைந்த கையோடு, தேசிய மருந்து கட்டுப்பாட்டு முகமையின் அனுமதியோடு அவை மாநிலங்களுக்கும் தடுப்பூசி மையங்களுக்கும் அனுப்பி் வைக்கப்படும். தற்போது 90 விழுக்காடு அளவினா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதால் சில மாநிலங்களில் குறைந்த அளவிலான தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளன," என்று அமைச்சர் கைரி ஜமாலுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.
பல இடங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவில்லை என தகவல் வெளியான நிலையில், அரசாங்கத்தின் முந்தைய முன்னெடுப்புகளின் பலனாக மிக விரைவில் போதுமான தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும் என அமைச்சர் கைரி ஜமாலுதீன் உறுதியளித்துள்ளார்.
தடுப்பூசி கொள்முதல், விநியோக நடைமுறைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் தாம் அறிவுறுத்தி இருப்பதாக பிரதமரும் அண்மையில் கூறியிருந்தார்.