நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

உள்நாட்டு படைப்புகளுக்கும் உள்ளூர் கலைஞர்களுக்கும்  ஆதரவு கரம் நீட்டுங்கள்

கோலாலம்பூர்:

அண்மையில் நடைப்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு மகத்தான ஆதரவளித்த மலேசிய ரசிகர்கள் உள்நாட்டு கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று ஆதங்கம் மேலோங்கி வருகிறது.

நிகழ்ச்சிக்கான நுழைவுக்கட்டணம் விலை அதிகம், பிறமொழி பாடல்கள் இடம் பெற்றது, இரவு 8.00மணி நிகழ்ச்சிக்கு  முன்கூட்டியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அரங்கில் நுழைய முற்பட்டு இருக்கைகளை பிடிக்க முனைந்தது போன்ற பல  விமர்சனங்கள் பேசுப்பொருளாகியிருக்கிறது.

நிகழ்ச்சியின் தலைப்பு கூட தமிழில் இல்லையே என்று தமிழ் ஆர்வலர்கள் வேதனைப்பட்ட செய்திகள் வெளிவந்தன. அது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தனியுரிமை. அதில் தலையிட நமக்கு உரிமையில்லை.

இந்த நாட்டில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நமது கலை கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நமது மலேசியக் கலைஞர்கள் தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.

ஆனால் நமது உள்ளூர் கலைஞர்களுக்கு நாம் வழங்கும் ஆதரவு என்பது வேதனையும் ஏமாற்றமும் மட்டுமே.

கடல் கடந்து வந்து போகும் கலைஞர்களையும், கலை நிகழ்ச்சிகளயும் கண்டு களிப்பதும், ஆதரிப்பதும் தவறல்ல. அதே சமயத்தில் நம்நாட்டு கலைஞர்கள் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சிகளுக்கும் நமது ஆதரவு திரும்ப வேண்டும்.

நம்நாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் 10 வெள்ளிலிருந்து 30 வெள்ளியும், அதிகப்பட்சம் 50 வெள்ளி நுழைவு சீட்டு (டிக்கெட்) மட்டுமே விற்கப்படுகிறது. பெரும்பாலும் 20லிருந்து 30 வெள்ளி மட்டுமே.

ஆனால்,  இந்த நுழைவு கட்டணத்தைகூட வாங்கி நமது நாட்டு கலைஞர்களுக்கு ஆதரவுக் கரம் நாம் நீட்டுவதில்லை. இந்த நாட்டில் நமது உள்ளூர் கலைஞர்கள் ஏற்பாடு செய்து தயாரித்து வழங்கும் கலைநிகழ்ச்சிகளில் 10ல் 8 தோல்வியையே சந்திக்கின்றன. மீதம் 2 தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூச்சு முட்ட திணறி நிற்கிறது.

காரணம் உள்ளூர் கலைஞர்களுக்கு உள்ளூர் ரசிகர்களின் அல்லது இந்திய சமுதாயத்தின் ஆதரவு கிடைப்பதில்லை என்பதை விட கொடுப்பதில்லை.

ஆனால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வெள்ளி கொடுத்து கடல் கடந்து வரும் கலைஞர்களுக்கு அள்ளி கொடுக்கும் ரசிகர்களே நம்மூர் கலைஞர்களுக்கு கிள்ளியாவது வழங்க வேண்டாமா?

நமது கலைஞர்கள் உள்ளூர் ரசிகர்களான நம்மை நம்பிதான் இருக்கிறார்கள். மேலும் நமது கலைஞர்களுக்கு இது தொழில் அல்ல. அன்றாட வாழ்வாதாரமும் அல்ல.
பகுதி நேரமாக கலைத்துறை மீது கொண்ட ஆர்வத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள் என்பதனையும் கவனத்தில்  வைக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் நமது வீட்டு திருமணம், பிறந்த நாள், கோவில் திருவிழாக்கள், தைப்பூச  விழாக்கள், அரசியல், அரசு சாரா இயக்கங்கள்(NGO) போன்ற நிகழ்வுகளில் நம்நாட்டு கலைஞர்கள் தானே கலை இரவு அல்லது கலை நிகழ்ச்சிகளை படைத்து வழங்குகிறார்கள். அதுவும் மிகமிக குறைந்த கட்டணத்தை பெற்றுக் கொண்டு என்பதனையும் மலேசிய இரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நமது கலைஞர்கள் அப்படியென்ன தரமான படைப்புகளை வழங்குகிறார்கள் என்று ரசிகர்களிடமிருந்து கேள்விகள் எழலாம்.

உள்ளூர் ரசிகர்களிடமிருந்து வலுவான ஆதரவு கிடைக்குமானால் நமது கலைஞர்களாலும் தரமிக்க படைப்புகளை நிச்சயம் வழங்க முடியும். நம்நாட்டு பாடகர் தானே மலேசியா வாசுதேவன். அவரைப் போன்றவர்கள் நிறைய பேர் இலைமறைவு காய் மறைவாக இருக்கிறார்கள்.

60 ஆயிரம் ரசிகர்கள் வேண்டாம், உங்கள் வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்படும் உள்ளூர் கலை நிகழ்ச்சிகளுக்கு 600 இரசிகர்கள் ஆதரவு தந்தாலே போதும். நமது கலைஞர்கள் வாழ்வார்கள். வீறுகொண்டு எழுவார்கள்.

உள்நாட்டு கலைஞர்கள், பள்ளிக்கூடங்கள், இயக்கங்கள் மன்றங்கள், கோவில் திருப்பணிகள், தனிமனித மருத்துவ உதவிநிதி, ஏழை மாணவர்களுக்கான கல்வி நிதி இப்படி  இன்னும் எத்தனையோ நிதி திரட்டும் நிகழ்வுகளுக்கு நமது உள்ளூர் கலைஞர்கள் தான் முன்நின்று நிகழ்ச்சிகளில் பங்குபெற்று சம்பந்தப்பட்ட நிதி நிகழ்ச்சிகளுக்கு குறைந்த கட்டணத்தை பெற்றுக் கொண்டு சில சமயங்கள் கட்டணமே வாங்கமல் முன்வந்து தங்களது பங்களிப்பை வழங்கி சமுதாயத்தோடு தோள் கொடுத்து  கொண்டிருக்கிறார்கள் என்பதனை நன்றியோடு நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

மலேசிய இந்திய சமுதாயத்தின் ஏதாவது ஒரு திட்டவரைவுக்கு இலவசமாகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு சிறு தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு கலைப்படைப்பை வழங்குங்கள் என்று கடல் கடந்த இசைக்கலைஞர்களையோ, நடிகர்களையோ அழைத்து பாருங்கள் வருவார்களா?  லட்சக்கணக்கில் சம்பளமாக பெற்று கொண்டு தான் வருவார்கள்.

அந்த நாட்டில் இல்லாத செல்வந்தர்களா? நடிகர்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை கொண்டு நடிகர் சங்க கட்டிடத்தை அவர்கள் கட்ட மாட்டார்கள். மலேசியத்தமிழர்களிடம் வசூலித்து காட்டுவார்களாம். நாமும் முட்டாள்தனமாக டிக்கெட் வாங்கி அதனை ரசிப்போம்.

மலேசிய நாட்டில் நமது திரை கலைப்படைப்பாளர் இருக்கின்ற தொழில் நுட்பத்தையும்,பொருளாதாரத்தையும் கொண்டு மலேசிய திரைப்படங்களை எடுத்து நமது உள்ளூர் திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள்.இதற்கு நமது ஆதரவு எப்படி இருக்கிறது என்பதனை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம்.

இந்த வாரம் வெளியான அடைமழைக் காலம் எனும் அற்புதமான மலேசிய திரைப்படத்தை நம்மில் எதனை பேர் பார்த்தோம்? வாரிசுக்கும் துணிவுக்கும் அள்ளிக்கொடுத்த நாம், உள்ளூர் படங்கள் தரமாக வந்தாலும் திரும்பி பார்க்காமல் இருக்கிறோம்.

மனம் மாறுங்கள். உள்ளுர் கலைஞர்கள், படைப்பாளர்களை ஆதரித்து அரவணையுங்கள். 

- எம்.ஏ.அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset