
செய்திகள் உலகம்
முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன் வாருங்கள்: உலமா சபை நூற்றாண்டுவிழாவில் இலங்கை அதிபர் ரணில் அழைப்பு
கொழும்பு:
75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எந்த சமயமும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சமயம் அல்ல எனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வசேத மாநாட்டு மண்படத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிபர் கூறியதாவது:
உலமா சபை இன்று தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இது அவர்களது நூற்றாண்டு விழாவாகும். இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தை நினைவுக்கூற வேண்டும். முதலாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் உலகம் மிகப் பெரிய மாற்றத்துக்கு முகம்கொடுத்து வந்த காலகட்டமே 1922 ஆம் ஆண்டாகும்.
இக்காலப்பகுதியில் கலீபா ஆட்சி முறையை ஒழிக்கும் நடைமுறையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. கலீபா ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்கு இந்தியா மிகப் பெரிய இயக்கமொன்றைக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் அதே காலப்பகுதியில் தான் முஸ்லிம்களின் எண்ணங்களதும் சிந்தாந்தத்தினதும் மையமாகச் செயற்படும் உலமா சபை எனும் அமைப்பை ஸ்தாபிக்கப்பட்டது. எனினும் அப்போதிருந்த சில பிரச்சினைகளுக்கு நாம் இன்றும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
நாம் இப்போது வித்தியாசமானதொரு உலகத்தில் வசிக்கின்றோம். 1922 ஆம் ஆண்டில் 150 நாடுகளும் அப்போது இருக்கவில்லை. நாம் புதிய நூற்றாண்டில் வசிக்கின்றோம். விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தி, அரசியல் உரிமைகளின் முன்னேற்றம் என்ற இந்தப் பின்னணியில் நாம் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்.
இஸ்லாம் மட்டுமன்றி அனைத்து சமயங்களுமே தமது சமயத்தின் அடிப்படைகளையே பார்க்கின்றன.
சமயம் கூறும் தூய்மையான அர்த்தங்கள் எவை? அவற்றை எவ்வாறு நவீன உலகத்துடன் இணைப்பது?
சமயத்தின் அடிப்படையை நீங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பௌத்தம். புத்த பெருமான் கங்கைக் கரைகளில் இருந்து பௌத்த மதத்தைப் போதிக்கும்போது கரையோர நகரிகமே இருந்தது. எனினும் அது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது பௌத்த சமயத்தில் ஓரளவு அடிப்படையைக் கொண்டிருந்த கரையோர நாகரீகத்தை கட்டியெழுப்ப எம்மால் முடிந்தது.
அது கௌதம புத்தருடைய காலத்தில் இல்லை என்பதற்காக நாம் இந்த நாகரீகத்தை நிராகரிக்கவில்லை. எனினும் எம்மால் அந்த நாகரீகத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது.
அதுபோன்றே, நாம் அனைவரும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டே எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்.