நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இறந்தோர் 168 பேர்: போலிசார் இறுதிப்பட்டியலை உறுதிப்படுத்தினர் 

ஹாங்காங்:

கடந்த நவம்பரில் ஹாங்காங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தில் 168 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை, முன்னதாக அறிவிக்கப்பட்டதை விட ஏழு பேர் அதிகம் ஆகும். உயிரிழந்தவர்களின் வயது ஆறு மாதக் குழந்தை முதல் 98 வயது வரை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவர்களில் 58 பேர் ஆண்கள், 110 பேர் பெண்கள் என ஹாங்காங்க் போலீஸார் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோர், அந்த அடுக்குமாடி வளாகத்தில் பல நாட்களாக வசித்து வந்த மூத்த குடிமக்கள் ஆவர்.

வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற அந்த குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து, கடந்த சில வருடங்களில் ஹாங்காங்கில் நிகழ்ந்த அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தீ விபத்தாகக் கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, திட்டமிடாத கொலை, மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ புதன்கிழமை தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் முடிவடைந்தவுடன் இறுதி உயிரிழப்பு எண்ணிக்கை 168 என பாதுகாப்பு செயலாளர் கிரிஸ் டாங் உறுதிப்படுத்தினார்.

உயிரிழந்தவர்களில் 10 வீட்டு உதவியாளர்கள் (அவர்களில் ஒன்பது பேர் இந்தோனேசியர்கள், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்), மேலும் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்கள், இரண்டு உள் அலங்காரப் பணியாளர்கள் அடங்குவர்.

1980-களில் கட்டப்பட்ட இந்த வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகம், ஹாங்காங்கின் வடகிழக்கு தை போ (Tai Po) மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இங்கு சுமார் 4,600 பேர் வசித்து வந்துள்ளனர்.

அவர்களில் சுமார் 40 % பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

தீயைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தப் பணியின் போது 37 வயதான ஹோ வை-ஹோ என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் நான்கு பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 164 சடலங்கள் சம்பவ இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டன.

தீ விபத்திற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset