
செய்திகள் மலேசியா
உணவகத்தில் அதிரடி சோதனை: இரண்டு இந்தியப் பிரஜைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தகவல்
பெட்டாலிங்ஜெயா:
பெட்டாலிங் ஜெயா பகுதியில் இயங்கிவரும் ஓர் உணவகத்தில் இருந்து இரண்டு இந்தியப் பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங்ஜெயா மாவட்ட காவல்துறை துணை ஆணையர் முஹம்மது பக்ருதீன் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது இருவரும் மீட்கப்பட்டதாக பி.ஜே. மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் தெரிவித்தார்.
மலேசியாவில் வேலை பார்த்தபோது தாம் மோசமாக நடத்தப்பட்டு ஊதியமும் தராமல் அலைக்கழிக்கப்பட்டதாக வேலாயுதம் என்பவர் இந்திய ஊடகத்துக்குப் பேட்டி அளித்திருந்தார்.
இது தொடர்பான காணொலி சில மாதங்களுக்குப் பின்பு மீண்டும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதனால், ஏற்பட்ட பரபரப்பை அடுத்து அந்தப் பேட்டியை வழிநடத்திய நெறியாளரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகிய இருவர் முன்னிலையில் மலேசிய உணவகம் மீது புகார் தெரிவித்த வேலாயுதம் விசாரிக்கப்பட்டார்.
இதையடுத்து அக் குறிப்பிட்ட உணவகத்தில் போலிசார் சோதனை நடத்தப்பட்டபோது 6 மலேசியத் தொழிலாளர்கள் மற்றும் ஓர் இந்தியப் பிரஜை விசாரிக்கப்பட்டனர். அப்போது தாம் சரமாரியாகத் தாக்கப்பட்டதாகவும், தமக்கு சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் அந்த இந்தியப் பிரஜை தெரிவித்துள்ளார். மேலும், உணவக மேற்பார்வையாளரால் தாம் பலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் அவர் கூறினார்.
தன்னைப் போலவே உணவகத்தில் பணியாற்றிய மற்றொரு இந்தியப் பிரஜையின் கால்களுக்குத் தீ வைக்கப்பட்டதை தாம் பார்த்ததாகவும் அவர் இன்று காவல்துறை செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
இதற்கிடையே மலேசியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் ஓர் உணவகம் தொடர்பாக புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
அப் பெண்மணி அளித்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இரண்டு இந்தியப் பிரஜைகள் மீட்கப்பட்டதாகவும், இருவரும் 23 , 34 வயதுடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
"உணவகத்திலும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குமிடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட உணவக மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதான அவரை கடந்த 18ஆம் தேதி கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தது.
"மீட்கப்பட்ட இரு இந்திதியப் பிரஜைகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக நம்பப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஏற்கெனவே போதை மற்றும் இதர குற்றச்செயல்களில் ஈடுபட்டவர். விசாரணைக்கு உதவும் வகையில் அவரை 6 நாட்கள் ரிமாண்டில் வைத்துள்ளோம்," என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm