
செய்திகள் மலேசியா
சட்டவிரோதமாக இமிகிரேஷன் சேவை: வங்க தேசத்தை சேர்ந்த இருவர் கைது
கோலாலம்பூர்:
குடிநுழைவுத் துறை (இமிகிரேஷன்) வழங்கும் சேவைகளை சட்டவிரோதமாக செய்துவந்த இருவர் கைதாகி உள்ளனர்.
வங்க தேசத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும் கோலாலம்பூரின் லெபோ அம்பாங் பகுதியில் ஒரு வாடகை அறையில் இயங்கி வந்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று இருவரும் பிடிபட்டனர்.
இவர்கள் இருவரில் ஒருவர் கெடா மாநில காவல்துறையினரால் தேடப்பட்டு வந்ததாக இமிகிரேஷன் தலைமை இயக்குநர் கைருல் ஸைமி தாவூத் Khairul Dzaimee Daud தெரிவித்துள்ளார்.
இருவரும் குடிநுழைவுத் துறை அண்மையில் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக அறிவித்த அந்நியத் தொழிலாளர் மறுகட்டமைப்பு Recalibration programme திட்டத்திற்கான முகவர்களைப்போல் செயல்பட்டு ஏமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.
"சந்தேக நபருக்கு கடந்த மார்ச் மாதமே கெடா போலீசார் வலை வீசியிருந்தனர். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வங்கதேச பயண ஆவணங்களை ஒழுங்கற்ற முறையில் மலேசியாவில் உள்ள அந்நாட்டு குடிமக்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ஏமாற்றியதாக சத்தேகிக்கப்படுகிறது.
குடிநுழைவுத் துறையின் வெளிநாட்டுத் தொழிலாளர் மறுகட்டமைப்பு Recalibration programme திட்டத்தின் கீழ் நாடு திரும்ப விரும்புகிறவர்களுக்கு இச் சேவையை வழங்குவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
"மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தையும் கடந்து இங்கே தங்கி இருப்பவர்கள் அல்லது உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்களும்தான் இவர்களது இலக்கு. முதற்கட்ட விசாரணையில் The Recalibration programme-க்கான விண்ணப்பத்துக்கு ஒவ்வொரு நபரிடம் இருந்து 100 முதல் 2,500 ரிங்கிட் வரை பெற்றுள்ளனர். பயண ஆவணங்களுக்கு 1000 முதல் 1500 ரிங்கிட் வரை கட்டணம் வசூலித்துள்ளனர்.
"அவர்கள் இயங்கிய இடத்தில் சோதனையிட்டபோது 4 கடப்பிதழ்கள், 4 வங்க தேச பயண ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் நாடு முழுவதும் இயங்கிவரும் மாநில குடிநுழைவு அலுவலகங்களில் இமிகிரேஷன் சேவைகளுக்காக இணையம் வழி வழங்கப்படும் முன்பதிவு டோக்கன்களும், MCO காலத்தில் மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள அளிக்கப்படும் பர்மிட்டுகளும், வங்க தேச தூதரக ஆவணங்கள் மற்றும் 8 வங்கி அட்டைகள் ஆகியவையும் அங்கு இருந்துள்ளன.
இதன்மூலம் வேறு சில சட்டவிரோத செயல்பாடுகளிலும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது," என Khairul Dzaimee Daud தெரிவித்தார்.
இதுவரை Recalibration programme திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை இவர்கள் தயார் செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் 38, 53 வயதுடையவர்கள் என்றும் இமிகிரேஷன், கடப்பிதழ் சட்டம் 1996ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், வெளிநாட்டுத் தொழிலாளர் திரும்ப அனுப்பும் மறுகட்டமைப்பு திட்டத்துக்காக குடிநுழைவுத் துறை யாரையும் பணியமர்த்தவோ அல்லது முகவராக செயல்படவோ ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் Khairul Dzaimee Daud தெளிவுபடுத்தினார்..
பொதுமக்கள் குடிநுழைவுத் துறையிடம் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும் என்றும் மூன்றாம் தரப்பினரை நம்பவேண்டாம் என்றும் அத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் கேட்டுக் கொண்டுள்ளார்.