
செய்திகள் மலேசியா
மனித வாழ்க்கையில் அனைவருக்குமான ஓர் உன்னத உறவு தந்தை: டத்தோஸ்ரீ எம்.சரவணன் நெகிழ்ச்சி
கோலாலம்பூர்:
பெற்ற பிள்ளைகளை கல்வியில் சிறந்தவர்களாக வளர்த்தெடுப்பதே ஒரு தந்தையின் தலையாய கடமை என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் தங்களை உயர்த்திவிட்ட பெற்றோரை நல்லவிதமாக பாதுகாப்பதுதான் பிள்ளைகளின் கடமை என்று தமது தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தகுந்த வாய்ப்புகளையும் உரிய வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது ஒரு தந்தையின் கடமை என்று சொல்லப்பட்டாலும், அந்தப் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு செழிப்பாக இருக்க, தங்களையே வருத்திக் கொள்ளும் தந்தையர்களின் தியாகத்தை டத்தோஸ்ரீ சரவணன் போற்றியுள்ளார்.
பெற்றோரின் தேவையறிந்து, பணிவிடை செய்து, மகிழ்ச்சியாக அவர்களை வைத்துக்கொள்வது பிள்ளைகளின் கடமை என அறிவுறுத்தி உள்ள அமைச்சர், வாழும்போதே பெற்றோரை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
முந்தைய தலைமுறையில் அப்பாக்கள் கண்டிப்புடன் இருந்தனர் என்றும், அப்போதுதான் பிள்ளைகளை நல்வழியில் வளர்த்து ஆளாக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ள டத்தோஸ்ரீ சரவணன், அப்பாக்களின் அந்த எண்ணம் வெற்றியைத் தந்தது எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.
இன்றைய தலைமுறை தந்தைமார்கள் நேர்மாறாக இருப்பதாகவும், பிள்ளைகளை சிறு வயது முதலே அன்பும் அரவணைப்புமாய், தாயுள்ளத்துடன் வளர்ப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், இன்று பிள்ளைகளைக் கண்டிக்கும் அம்மாக்களையே கண்டிக்கும் அப்பாக்கள் தான் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தந்தைதான் ஒரு குடும்பத்தின் ஆணிவேர் என்றும், தாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் மறைத்து, தன் மனதில் தாங்கி பிள்ளைகளை கல்வி, பொருளாதார ரீதியாக உயர்த்த பாடுபடுவது தந்தைதான் என்றும் அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அல்லும் பகலும் உழைக்கும் ஓர் உன்னத உறவுதான் தந்தை. குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, பிள்ளைகளுக்குத் தேவயானவற்றை வழங்கும் அந்த தாய் உள்ளம் படைத்தவர்களுக்கு தனது இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் என்று தமது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm