
செய்திகள் மலேசியா
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் அம்னோவுக்கு ஆர்வம் இல்லை: தாஜுதின் அப்துல் ரஹ்மான்
கோலாலம்பூர்:
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் அம்னோவுக்கு ஆர்வம் இல்லை என்று அக் கட்சியின் தேர்தல் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ தாஜுதின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று காலத்தில் அரசுக்கு உதவும் வகையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைத்தான் அம்னோ எம்பிக்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றை எவ்வாறு எதிர்கொண்டு மேலாண்மை செய்வது என்பதில்தான் அம்னோ கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.
"நாடாளுமன்ற அமர்வுக்கு ஏற்பாடு செய்யும்படி எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் கூறிவிட்டனர். எனவே அதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்.
"இவ்விஷயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து யாரும் பேசப் போவதில்லை என்று பிரதமருக்கு ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
"நாடாளுமன்றம் இயங்கும் பட்சத்தில் மக்களும் நாட்டின் பொருளாதாரமும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு தெரிவிக்க முடியும். தற்போதைய சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ன நடக்கிறது என்பதை வெறுமனே பார்த்துக் கொண்டும் உணவு விநியோகிப்பதை மட்டுமே செய்து வருகின்றனர்.
"அவரநிலை காலத்தில் அதை மட்டுமே செய்ய முடியும். எனவே, நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்," என்று தாஜுதின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.