
செய்திகள் மலேசியா
முழு முடக்கநிலை நீட்டிப்பு: உணவகங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன; 3 மாத கடன் தவணைச் சலுகை அளிக்க பெரஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி கோரிக்கை
கோலாலம்பூர்:
முழு முடக்கநிலை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான உரிய கால அவகாசமும் கடன் தவணை நீட்டிப்புச் சலுகையும் நீட்டிக்கப்படவேண்டும் என மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பெரஸ்மா) வலியுறுத்தி உள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்கு கட்டிட - நில உரிமையாளர்கள் வாடகை நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பணப்புழக்கம் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் 4,750 உணவகங்கள் வெகு விரைவில் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அச் சங்கத்தின் (பெரஸ்மா) தலைவர் டத்தோ ஜவஹர் அலி கூறியுள்ளார்.
அன்றாட, வழக்கமான இயக்கச் செலவுகள் காரணமாக பெரும்பாலான வணிகங்கள், தொழில்களில் அவற்றுக்கான முதலீடு மற்றும் கையிருப்பு தொகைகளின் மீது கைவக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 95 விழுக்காட்டினர் தங்களுக்குச் சொந்தமான கட்டடங்களில் தொழில்களை நடத்தவில்லை. எனவே, உணவகத் தொழில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு சரிவைச் சந்தித்துள்ள நிலையில் முழு வாடகையையும் செலுத்தவேண்டிய கடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உதாரணமாக TTDI-இல் உணவகம் நடத்தும் ஒருவர் நாள்தோறும் 500 ரிங்கிட் வாடகை செலுத்த வேண்டும் என்றால் ஒரு மாதத்துக்கான வாடகைத் தொகை 15 ஆயிரம் ரிங்கிட் என்றாகிறது.
இதேபோல், கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இயங்கிவரும் ஒரு சைவ உணவகத்தில் கிளையில் நாள்தோறும் 160 ரிங்கிட்டுக்கு மட்டுமே வியாபாரம் நடக்கிறது. எனவே, மேற்கொண்டு 13 ஆயிரம் ரிங்கிட் தொகையை மாதம்தோறும் வாடகையாக கொடுக்கவேண்டி இருக்கிறது.
12500 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது பெரஸ்மா சங்கம். அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மூன்று மாத காலத்துக்கு கடன் தவணைச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் கடன்தொகை (கிரெடிட் புள்ளிகள்) பாதிக்கப்படாத வகையில் கடன்களுக்கான தவணைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜவஹர் அலி வலியுறுத்தி உள்ளார்.
"உணவக உரிமையாளர்கள் பலர் தொழிலைக் கைவிட்டு நிற்கும் அவல நிலை அதிகரித்து வருகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். இதே ரீதியில் சென்றால் வங்கிகளுக்கு எந்தக் கடன் தவணைகளும் வந்து சேராது; செலுத்தவும் இயலாது.
"பெரஸ்மா உறுப்பினர்களில் சுமார் 10 விழுக்காட்டினர் கடன்களைத் திரும்பச் செலுத்தத் தவறினால் வங்கிகளுக்கு 10 பில்லியன் ரிங்கிட் நஷ்டம் ஏற்படக்கூடும். பெரஸ்மா உறுப்பினர்கள் நாட்டின் வருவாயைக் கூட்டுவதிலும் வரிகளை செலுத்துவதிலும் முன்னிலை வகிக்கின்றார்கள்.
"கடந்த 2020ஆம் ஆண்டும், நடப்பு 2021இல் முதல் காலாண்டிலும் வங்கிகள் பெரும் லாபத்தை ஈட்டி உள்ளன. எனவே, வங்கிகள் தங்கள் பணத்தை இழக்கத் தேவையில்லை. மாறாக, கடன் தவணைச் சலுகையை அளித்தால் போதுமானது.
"பெருந்தொற்று நெருக்கடி காலம் முடிவுக்கு வந்து, அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவோம்.
"இதேபோல் கடன் தவணைச் சலுகையைப் பெற்றுள்ள கட்டிட உரிமையாளர்கள் அந்தப் பலன்கள் வாடகைதாரர்களுக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும். இதுதொடர்பாக அரசாங்கம் உரிய வழிகாட்டி நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும்.
"பெருந்தொற்றுக் காலத்தில் பணப்புழக்கம் குறைவதன் காரணமாக வாடகை செலுத்த முடியாத குடியிருப்பாளர்கள் மீது நில - கட்டிட உரிமையாளர்கள் வழக்கு தொடுக்க முடியாது. கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் இத்தகைய நிவாரணம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் அரசாங்கம் வழிகாட்டி நெறிமுறைகளை அளிக்கவேண்டும்," என்று டத்தோ ஜவஹர் அலி மேலும் வலியுறுத்தி உள்ளார்.
"மொத்தத்தில் அரசாங்கம், உணவக உரிமையாளர்களும் இதர தொழில் செய்பவர்களும் படும் இன்னல்களைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். பொருளகங்கள் நெருக்கடி தராமலும் கட்டிட உரிமையாளர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் வழங்கவும் வேண்டும் என்று கோருகிறேன்."
இவ்வாறு மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ ஜவஹர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.