
செய்திகள் மலேசியா
தேசிய மறுவாழ்வு மன்றம் அமைக்கலாம்: துன் மஹாதீர் யோசனை
கோலாலம்பூர்:
நாட்டை வழிநடத்த தேசிய மறுவாழ்வு மன்றம் ஒன்றை அமைக்கலாம் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
இந்த மன்றமானது அரசியலுக்கு அப்பாற்பட்டு மாமன்னரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்றும் மலேசியா மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்த கையோடு மன்ற செயல்பாடுகள் முடிவுக்கு வரும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"இந்த மன்றத்தில் மருத்துவ நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள், முதலீட்டு நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பர். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு உதவக்கூடிய ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்களாக இந் நிபுணர்கள் இருப்பர். மேலும் கட்சி சார்பாக செயல்படாத சில அரசியல் பிரமுகர்களும் இடம்பெறுவர்.
"இருபது பேருக்கும் மேற்பட்டவர்கள் இம் மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள். நாட்டில் அண்மைய அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது. நடப்பு அரசாங்கத்தால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.
"இந்த புதிய மன்றமானது அரசாங்கத்துக்கு மாற்றாக அமையாது. மாறாக புதிய தொற்று எண்ணிக்கைகளை குறைப்பதிலும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை எட்டிப் பிடிப்பதிலும் மட்டுமே கவனம் கொண்டிருக்கும். மேலும் பொருளியல் நடவடிக்கைகள் மற்றும் கல்வி சார்ந்த பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தும்," என்று துன் மகாதீர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாமன்னரைச் சந்தித்த பிறகு தேசிய செயல்பாட்டு (நடவடிக்கை) மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என தாம் அவரிடம் கேட்டுக் கொண்டதாக துன் மகாதீர் கூறியிருந்தார்.
கடந்த 1969ஆம் ஆண்டு நாட்டில் இதே போன்ற மன்றம் அமைக்கப்பட்டதாகவும் அதன் மூலம் அப்போதைய சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
தற்போது நடுநிலைக்கான தேசிய மறுவாழ்வு மன்றத்தை அமைக்குமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.