நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சுங்கை சிப்புட் நாடாளுமன்றம்: தேர்தல் பார்வை

சுங்கை சிப்புட்:

சுங்கை சிப்புட் நாடாளுமன்றம் அம்னோவுக்கு கை மாறுகிறதா என்ற ஐயம் தற்போது எழுந்துள்ளது. கடந்த 2008, 2013, 2018 ஆகிய மூன்று தேர்தல்களில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து போட்டியிட்ட மஇகா வேட்பாளர்கள் கெ அடிலான் கட்சியின் வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்தனர்.

எதிர்வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் மஇகாவின் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட்டில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். நீண்ட நாட்களாக அந்தத் தொகுதி மக்களுடன் அவர் உறவாடி வருகிறார்.

கடந்த  3 ஆண்டுகளாக அவர் வார இறுதிகளில் சுங்கை சிப்புட்டில் தொடர்ந்து களமாடி வருகிறார்; மக்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தத் தொகுதியில் அம்னோ போட்டியிட ஆர்வம் கொண்டிருக்கிறது என்று அம்னோ வட்டாரங்கள் ஒரு செய்தியை கசிய விட்டுள்ளன.  

இரண்டு சட்டமன்றங்களை கொண்டிருக்கும் இந்த நாடாளுமன்றத்தில் லிந்தாங் அம்னோவும், ஜாலோங் டிஏபி வசமும் இருந்து வருகிறது. நாடாளுமன்றம் கெ அடிலானிடம் இருக்கிறது. இம்முறை ம இ கா இதை மீண்டும் மீட்டெடுக்க கடுமையாக போராடும் என்ற நிலையில் தீவிரமாக செயலாற்றி வருகிறது.

அரசியல் கள நடப்பு மாறுதலில் பிஎஸ்எம் கட்சி ஹரப்பனோடு கைகோர்த்து இருப்பதால் அக் கட்சியின் தேசியத்தலைவர் டாக்டர் ஜெயக்குமார்  இங்கு போட்டியிடும் சாத்தியம் உண்டு என்று கூறப்படுகிறது.

இவர் 2008இல் துன் ச.சாமிவேலுவையும், 2013இல் எஸ்.கே.தேவமணியையும் கெ அடிலான் சின்னத்தில் நின்று தோற்கடித்தவராவர். 2018 தங்களது சொந்த கட்சி சின்னமான பிஎஸ்எம் கட்சி சின்னத்தில் நின்று 1505 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்து கட்டு தொகையையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அம்னோவிற்கு எதிராக வீசிய சுனாமியில் 2018 கெ அடிலான் வேட்பாளர் கேசவன் இங்கு வெற்றி பெற்றார்.

15 ஆவது பொதுத்தேர்தலில் கேசவனுக்கு சட்டமன்ற தொகுதி வழங்க கட்சி முடிவு செய்திருப்பதால் மீண்டும் டாக்டர் ஜெயக்குமார் கெடிலான் வேட்பாளராக போட்டியிடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

எதுவாகிலும் இறுதி முடிவில் தேசிய முன்னணி  சுங்கை சிப்புட் நாடாளுமன்றம் மீண்டும் மஇகாவுக்கே என்ற நிலைப்பாட்டிற்கு வருமானால் விக்னேஸ்வரன்  அங்கு நிற்பதில் சந்தேகமில்லை. 

ஆனால் சுங்கை சிப்புட் தொகுதி என்பது இரு கட்சிகளுக்கும் எளிதாக வெற்றி பெறக்கூடிய தொகுதியல்ல சுங்கைசிப்புட். 50/50 என்ற நிலைதான் நிலவுகிறது. யார் வெற்றி பெற்றாலும் கடும் போராட்டத்திற்கு பிறகே வெற்றிக் கனியை பறிக்க முடியும். 

- பேராக் புகழேந்தி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset