செய்திகள் சிந்தனைகள்
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் ஈமான் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொள்பவராக நீங்கள் இருந்தால் உண்மையிலேயே உங்களுடைய வாழ்வும் மரணமும் இறைவனுக்காகவே இருக்கின்றதா என ஆய்ந்து பாருங்கள்.
உங்களை நீங்களே ஆய்வு செய்து பாருங்கள்.
நீங்கள் அவனுக்காகவே வாழ்கின்றீர்களா?
உங்களுடைய இதயம் அவனுக்காகவே துடிக்கின்றதா?
உங்களுடைய மூளையும் பிற ஆற்றல்களும், உங்களுடைய உடலும் மற்ற வலிமைகளும், உங்களுடைய உழைப்புகளும், உங்களுடைய நேரங்களும் இறைவனின் விருப்பங்களை நிறைவேற்றுகின்ற வேள்வியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகிறனவா?
இறைஉவப்பைப் பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவே உங்களுடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்துள்ளதா?
அந்தச் சிந்தனையிலேயே, அதனைச் செயல்-படுத்த வேண்டும் என்கிற கவலையிலேயே உங்களுடைய இரவுகளும் பகல்களும் கழிகின்றனவா?
முஸ்லிம் சமுதாயத்தை வைத்துக் கொண்டு அவன் எந்தப் பணியைச் செய்ய நாடியிருக்கின்றானோ அந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்கிற தணியாத தாகம் உங்களிடம் இருக்கின்றதா?
இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிபணிந்து நடப்பவர்களாக, அவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்பவர்களாக நீங்கள் இருக்கின்றீர்களா?
மனஇச்சைகளுக்கு அடிபணிந்து நடக்கின்ற, குடும்பத்தவர்களின் விருப்புவெறுப்புகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்ற, தாம் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டு சமூகம் விதிக்கின்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்கின்ற, நண்பர்கள் போடுகின்ற தாளங்களுக்கேற்ப ஆட்டம் போடுகின்ற, அரசுக்கு அடிபணிந்து நடக்கின்ற, இன்னும் இவை போன்ற கீழ்ப்படிதல்களை விட்டும் அடிபணிதல்களை விட்டும் நீங்கள் முற்றாக முகம் திருப்பிக் கொண்டீர்களா?
இறைஉவப்பைப் பெற வேண்டும் என்கிற உன்னத இலட்சியத்துடன் உங்களுடைய விருப்பு வெறுப்புகளையும் மாற்றி அமைத்துக் கொண்டீர்களா? என்றெல்லாம் உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து பாருங்கள்.
அடுத்து எவரையாவது நேசிக்கின்றீர்கள் எனில் இறைவனுக்காகவே அவரை நேசிக்கின்றீரா என்கிற கோணத்தில் ஆய்வு செய்யுங்கள்.
எவரையாவது வெறுக்கின்றீர்கள் எனில் இறைவனுக்காகவே அவரை வெறுக்கின்றீரா என்கிற கோணத்தில் ஆய்வு செய்யுங்கள்.
அந்த நேசத்திலும் வெறுப்பிலும் உங்களுடைய சுயவிருப்பம் மற்றும் மனஇச்சையின் பங்கு எந்த அளவுக்கு இருக்கின்றது என்றும் சீர்தூக்கிப் பாருங்கள்.
அடுத்து இறைவனுக்காகவே கொடுக்கின்ற, இறைவனுக்காகவே கொடுக்காமல் தடுக்கின்ற உன்னத நிலையை அடைந்து விட்டீர்களா? என்றும் சோதித்துப் பாருங்கள்.
நீங்கள் உங்களுடைய பொருளையும் நேரத்தையும் மற்றவர்களுக்குக் கொடுப்பதன் பின்னணியில் இயங்குவது எது?
இறைவன் அவற்றைக் கொடுக்க வேண்டும் என்று வரையறுத்திருப்பதால் அவற்றைக் கொடுக்கின்றீர்களா?
இறைவனுடைய உவப்பைப் பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் கொடுக்கின்றீர்களா?
இதே போன்று நீங்கள் கொடுக்காமல் தடுப்பதற்கும் காரணம் என்ன? இறைவன் அவ்வாறு உங்களைத் தடுத்திருக்கின்றான் என்கிற காரணத்திற்காகத் தடுக்கின்றீரா? இவ்வாறு கொடுக்காமல் தவிர்த்துக் கொள்ளும்போது இறை உவப்பைப் பெற வேண்டும் என்கிற ஆசையும் வேட்கையும் உங்களுக்குள் மிகைத்திருக்கின்றதா? என்றும் ஆய்ந்து பாருங்கள்.
இத்தகைய எண்ணமும் உணர்வும் ஆசையும் வேட்கையும் உங்களுக்குள் இருக்கக் கண்டால் உங்களின் இறைநம்பிக்கையை முழுமையாக்கியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
இந்த விஷயத்தில் உங்களிடம் பலவீனமோ, குறையோ இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், மற்றெல்லா கவலைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இந்தக் குறையைப் போக்க வேண்டுமே என்று கவலைப்படுங்கள்.
அந்தப் பலவீனத்தைக் களைய என்ன செய்வது என யோசியுங்கள். உங்களுடைய உழைப்புகள், முயற்சிகள், கவனங்கள் எல்லாவற்றையும் இந்தக் குறையைப் போக்குகின்ற விஷயத்தில் குவித்துவிடுங்கள். ஏனெனில் உங்களின் உலக வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்தக் குறையைப் போக்குவதைப் பொருத்தே தீர்மானிக்கப்படும்.
உலகச் செல்வங்கள் அனைத்தையும் சம்பாதித்துக் குவித்தாலும்கூட அவற்றைக் கொண்டு இந்தக் குறைபாட்டின் காரணமாக உங்களுக்கு ஏற்படுகின்ற இழப்பை ஈடு செய்ய முடியாது.
ஆனால் நீங்கள் இந்தக் குறையைப் போக்குவதில் வெற்றி பெற்று விட்டாலோ உலகில் உங்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போனாலும் நீங்கள் நஷ்டத்தில் இருக்க மாட்டீர்கள்.
இந்த ஆய்வும் மதிப்பீடும் எதற்காக?
மறுமை நாளின் அந்த மாபெரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக தம்மைத் தாமே ஆய்ந்து பிழை ஏதேனும் இருப்பின் அதனைத் திருத்திக் கொள்வதற்காகத் தான் இந்த ஆய்வு.
இந்த உலக முஃப்திகளும் காஜிகளும் உங்களைக் குறித்து என்ன சொல்கின்றார்கள் என்கிற கவலை உங்களுக்கு வேண்டாம்.
நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதியாக, உள்ளங்களில் இருக்கின்ற மறைவான எண்ணங்களையும் அறிபவனாக இருக்கின்ற இறைவன் உங்களைக் குறித்து எத்தகைய தீர்ப்பு அளிக்கப் போகின்றானோ என்கிற கவலை தான் உங்களின் தூக்கத்தைப் பறிக்க வேண்டும்.
இந்த உலகில் முஸ்லிம்களின் பதிவேட்டில் உங்களுடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என நினைத்து நினைத்து சந்தோஷப்படாதீர்கள்.
இறைவனின் பதிவேட்டில் எந்தப் பட்டியலில் உங்களுடைய பெயர் இடம் பெற்றிருக்கின்றதோ என்றே அனுதினமும் கவலைப்படுங்கள்.
இதனால் சகலமானவருக்கும் தெரிவிக்கப்படுவதென்னவெனில் இன்னாரின் மகனாகிய இன்னார் முஸ்லிம் ஆவார் என்று உங்களைக் குறித்து ஒட்டுமொத்த உலகமும் கையொப்பமிட்டு சான்றிதழ் கொடுத்தாலும் எதுவும் தேறாது.
எந்த இறைவனிடம் இறுதித் தீர்ப்பு வழங்குகின்ற அதிகாரம் இருக்கின்றதோ அவன் உங்களை நயவஞ்சகன் என்பதற்குப் பதிலாக நம்பிக்கையாளன் என்றும் அடிபணிந்து வாழாதவன் என்று சொல்வதற்குப் பதி-லாக முழுமையாக கீழ்ப்படிந்து வாழ்ந்தவன் என்றும் நம்பிக்கை மோசடி செய்தவன் என்பதற்குப் பதிலாக வாய்மையான அடியான் என்றும் உங்களைக் குறித்து சொல்ல வேண்டும்.
அதுதான் உண்மையான வெற்றி..!
- மௌலானா மௌதூதி (ரஹ்)
தொடர்புடைய செய்திகள்
November 29, 2024, 7:00 am
நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனாகவே இருப்பான்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am