நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நன்றி செலுத்த வேண்டாமா...? - வெள்ளிச் சிந்தனை

‘அன்பு நபிகளார்(ஸல்) கூறினார்கள்: 
மறுமை நாளில் அருட்கொடைகள் குறித்துக் கேட்கப்படும் போது எல்லாவற்றுக்கும் முதலாவதாக, 'நாம் உனக்கு உடல்நலத்தைத் தந்திருக்கவில்லையா? குளிர்ந்த நீர் அருந்துகின்ற அருட்பேறைத் தந்திருக்கவில்லையா?’ என்கிற கேள்விதான் கேட்கப்படும்.

நூல் : திர்மிதி

இறைவன் இந்த உலகில் நம் எல்லாருக்கும் எண்ணற்ற அருள்வளங்களைக் கொட்டிக் கொடுத்திருக்கின்றான். அவற்றின் எண்ணிக்கையை எவராலும் வரையறுத்துப் புள்ளிவிவரமாகச் சொல்ல முடியாது.

ஆனால் உடல்நலமும், தாகமெடுக்கின்ற வேளையில் கிடைக்கின்ற குளிர்ந்த நீரும் இரண்டுமே மிகப் பெரும் அருள்வளங்கள் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அனைவருக்கும் நல்ல முறையில் அறிமுகமான அருள்வளங்கள்தாம் இவை. 

இந்த நபிமொழியில் இந்த இரண்டு அருட்கொடைகள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

உடல்நலமும் குளிர்ந்த நீரும் எத்துணைப் பெரிய அருட்கொடைகள் என்பதை எல்லாருமே உணர்ந்திருக்கின்றார்கள். இதனால்தான் இவற்றைக் குறித்தே எல்லாவற்றுக்கும் முதலாவதாக கேள்வி கேட்கப்படும். 

கேள்வி கேட்கப்படும் என்றால் என்ன பொருள்? 

இறைவன் உங்களுக்கு இந்த இரண்டு அருள்வளங்களையும் கொடுத்திருந்தானே, நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தினீர்களா? இல்லையா என்பதுதான் அந்த இறுதிநாளில் கேட்கப்படும் முதல் கேள்வியாக இருக்கும்.

இறைவன்தான் மனிதனுக்கு வாழ்க்கையைக் கொடுத்தான். அறிவுத் தெளிவையும், விழிப்புணர்வையும், சுய உணர்வையும், ஒன்றைக் கருத்தூன்றிப் பார்க்கும் அல்லது உணர்ந்தறியும் ஆற்றலையும் வழங்கினான். இறைவன் அருளிய இந்த அருள்வளங்களுக்குப் பகரமாக, இறைவன் அளித்த நன்மைகளுக்குப் பதிலாக அவன் *நன்றி செலுத்த வேண்டாமா?* மிகச் சிறந்த நடத்தையைக் கொண்டு அடிமனத்தின் ஆழத்திலிருந்து இதயப்பூர்வமாக, உளப்பூர்வமாக, மனமார நன்றி செலுத்த வேண்டாமா?

அதுதானே கடமை!

வாழ்வில் நமக்குக் கிடைத்த எண்ணற்ற அருள்வளங்களை அனுபவித்து மகிழ்கின்ற நம் எல்லார் மீதும் இருக்கின்ற மிகப் பெரும் முதன்மைக் கடமை என்ன தெரியுமா? 

இந்த அருள்வளங்களை நமக்குக் கொடுத்தது யார் என்பதைத் தெளிவாக அடையாளம் காண்பதுதான்.

அந்தக் கொடை வள்ளலைப் புரிந்துகொள்ள முயல்வதும் அவன் நம்மிடம் எதனை விரும்புகின்றான், அவன் எதிர்பார்ப்பதென்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வதும்தாம் நம் மீது இருக்கின்ற முதன்மைக் கடமையாகும்.

இந்த அருள்வளங்களைக் கொடுத்த இறைவன் அருள்வளங்கள் நிறைந்தவனாக, நன்மைகளும் கருணையும் நிரம்பியவனாக இருத்தல் வேண்டும். அதற்கு அவன் நமக்குக் கொடுத்த அருள்வளங்கள் எண்ணிலடங்காதவையாக இருப்பதே சான்று ஆகும்.

எண்ணிலடங்காத அருள்வளங்களைச் சலிக்காமல் கேட்காமல் கொடுத்துள்ளான் இறைவன். அது மனிதர்களோடு அவனுக்கு இருக்கின்ற ஆழமான உறவை வெளிப்படுத்துகின்றது. அந்த உறவின் நெருக்கத்தையும் பொருளையும் வெளிப்படுத்துகின்ற விதத்தில்தான் அவன் எண்ணற்ற அருள்வளங்களைக் கொடுத்து மகிழ்ந்துள்ளான். 

நம்முடைய உடலோடும் உயிரோடும் நமக்கு இருக்கின்ற தொடர்பை விட, உறவைவிட பன்மடங்கு அதிகமான, ஆழமான தொடர்பும் உறவும் அந்த அருள்வளம் நிறைந்த அருளாளனுடன் இருக்கின்றது. நம்முடைய இருப்பே, நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே அவனுடைய தயவில்தான். அவன்தான் எல்லாமே. அந்த உறவை அவன் துண்டித்துக் கொண்டால் நாம் அழிந்து நாசமாகிப்போய் விடுவோம். 

ஆனால், இறைவன் தன்னுடைய அடியானை ஒரே ஒரு நிமிடம் கூட கைவிடுவதில்லை. அடியான் மீது அருளாளனின் அருள் மழை எந்நேரமும் பொழிந்து கொண்டே இருக்கும். எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அடியானுக்கு இதம் தருகின்ற வகையில் அருளாளனின் நிழல் அவன்மீது விழுந்துகொண்டே இருக்கும். அருளாளனின் இந்த அருள் பொதுவானது. குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரியது என்பதல்ல. எல்லாருக்கும் உரியது. 

ஆனால் கணக்கின்றி, வரம்பின்றி மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்ற இந்த அருட்கொடைகளைக் கண்களை மூடிக் கொண்டு பயன்படுத்துகின்ற நாம், இவையெல்லாவற்றையும் ரசித்து ருசித்து அனுபவிக்கின்ற நாம் என்றாவது ஒரு நாளாவது இவற்றை வழங்கியவன் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவன் நம்மிடம் எதனை எதிர்பார்க்கின்றான் என யோசிக்கின்றோமா?

எந்த விதமான நிபந்தனையையோ, விதிமுறையையோ திணிக்காமல் இந்த அருள்வளங்களை எல்லாம் அவன் கணக்கின்றிக் கொடுத்திருக்கையில் நாம் என்ன செய்திருக்க வேண்டும்? 

அந்த அருளாளனுடன் உயிரோடும் உள்ளத்தோடும் ஐக்கியமாகிவிட வேண்டாமா? உச்சி முதல் கால் வரை நன்றியுணர்வால் நனைந்து விட வேண்டாமா? 

அருள்வளங்களைப் பெற்ற பிறகு நாம் நன்றி மறந்தவர்களாக, நன்றி கொன்றவர்களாக ஆகிவிட்டோமா? அந்த அருளாளனுக்கு எதிராகக் கலகம் புரிகின்றவர்களாக, அவன் விதித்த வரம்புகளைக் காலில் போட்டு மிதிப்பவர்களாக ஆகிவிட்டோமா?

அல்லது அந்த அருளாளனின் நன்றியுள்ள அடியார்களாக அவன் விதித்த வரம்புகளைப் பேணி வாழ்ந்த கீழ்ப்படிதல் மிக்க அடியார்களாக வாழ்ந்தோமா?

அருள்வளங்கள் குறித்துக் கேட்கப்படும் என்பதற்குப் பொருள் அதுதான்.

‘பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் *நீங்கள் வினவப்படத்தான் போகின்றீர்கள்*’ என்று குர்ஆன் (அத்தியாயம் 102 அத்தகாஸுர் : 8) அறிவிக்கின்றது.

- அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset