நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை

எத்தனை இன்னல்கள், இடையூறுகள் வந்தாலும் மலைத்துப் போய் மனம் ஒடிந்துவிடாமல் மலைபோல் நிமிர்ந்து நின்று சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

‘சுடும்வரைக்கும் நெருப்பு, சுற்றும் வரைக்கும் பூமி, போராடும் வரைக்கும் மனிதன், நீ மனிதன்’ என்று கூறுவார் கவிஞர் வைரமுத்து.

மக்காவில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சத்திய அழைப்புக்கு மக்கள் தரும் ஆதரவைக் கண்டு குறைஷிகள் ஆத்திரத்தில் துடித்தனர். கோபத்தில் கொந்தளித்தனர்.

இறைத்தூதரின் ஆன்மிகப் பணிகளை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டினர். 

மிரட்டினர்; 

வசை பாடினர்; 

ஏன் ஊரை விட்டும்கூட ஒதுக்கி வைத்தனர். 

எதற்கும் நபிகளார் அசைந்து கொடுக்கவில்லை.

குறைஷிகள் மனிதர்களிடம் இயல்பிலேயே உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி நபிகளாரை வீழ்த்தத் திட்டமிட்டனர். 

அது என்ன பலவீனங்கள்? அதுதான், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை.

குறைஷித் தூதர்கள் நபிகளாரைச் சந்திக்க வந்தனர். பேரம் பேசவும் தொடங்கினர்.

“முஹம்மதே, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறுங்கள். 

உங்கள் நோக்கம் அரபு நாட்டுக்கே மன்னர் ஆவதுதான் என்றால் சொல்லுங்கள், நாங்களே உங்களுக்குப் பட்டம் சூட்டி உங்களை எங்கள் மன்னராக ஏற்றுக்கொள்கிறோம்.

“பெண்தான் வேண்டும் எனில்,  அரபு நாட்டிலேயே பேரழகு வாய்ந்த பெண்ணாகப் பார்த்து உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறோம்.

“செல்வம் திரட்டுவதுதான் உங்கள் எண்ணம் என்றால் உங்கள் காலடியில் தங்கத்தையும் வெள்ளியையும் காணிக்கையாய்க் குவிக்கிறோம். உங்கள் பரப்புரையை மட்டும் கைவிடுங்கள்.”

குறைஷிகள் ஏதோ விளையாட்டுக்காக வந்து பேரம் பேசவில்லை. 

அன்றைய உலகில் மிகவும் புகழ்பெற்ற பன்னாட்டு வியாபாரிகளாக இருந்தார்கள்.

 சொன்னதைச் செய்து தரவும் தயாராக இருந்தார்கள்.

நபிகளாரின் இடத்தில் வேறு யாரேனும் இருந்தால் நிச்சயம் மனம் தடுமாறியிருப்பார்கள். 

ஆனால் இறைத்தூதர் (ஸல்) அளித்த பதில் என்ன தெரியுமா?

“நீங்கள் என் வலக் கையில் சூரியனையும், இடக் கையில் சந்திரனையும் வைத்தாலும் சரி- நான் என் கொள்கையிலிருந்தும் சத்திய அழைப்புப் பணியிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இறைவன் நாடினால் இந்த முயற்சியில் நான் வெல்வேன். இல்லையேல் இந்த முயற்சியிலேயே என் இறுதிமூச்சை விடுவேன்.”

கொள்கையில் குன்றென நிமிர்ந்து நின்ற இறைத்தூதரின் அந்தப் பதிலைக் கேட்டு குறைஷிகள் திகைத்துப் போயினர்.

“(தங்கள் கொள்கையில்) நிலைகுலையாமல் பொறுமையுடன் இருந்து, நற்செயல்கள் புரிபவர்களுக்கு இறைவனின் மன்னிப்பும் மாபெரும் நற்கூலியும் இருக்கின்றன.” (குர்ஆன்11:11)

-சிராஜுல் ஹஸன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset