நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கைக்கு அமெரிக்கா கூடுதல் நிதி உதவி

கொழும்பு,

ஜூன் 28: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்கா கூடுதலாக சுமார் ரூ.150 கோடி (2 கோடி அமெரிக்க டாலர்) நிதியுதவியை அறிவித்துள்ளது.

பொருளாதார சரிவைச் சந்தித்து வரும் இலங்கைக்கு உதவுவது தொடர்பாக அமெரிக்காவின் உயர்நிலைக் குழு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஜி7 நாடுகளின் மாநாடு ஜெர்மனியில் நிறைவடைந்த நிலையில், இலங்கைக்குக் கூடுதல் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கூடுதலாக சுமார் ரூ.150 கோடியை அமெரிக்கா வழங்கவுள்ளது. அந்த நிதியானது பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டத்துக்காகவும், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் உள்ள சுமார் 30,000 விவசாயிகளுக்கு உதவவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என்று அந்நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதியளித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக இதுவரை 57 லட்சம் அமெரிக்க டாலரையும், பால் உற்பத்தித் துறையை மேம்படுத்த 2.7 கோடி அமெரிக்க டாலரையும், தொழில்துறையை மேம்படுத்த 12 கோடி அமெரிக்க டாலரையும் இலங்கைக்கு அமெரிக்கா ஏற்கெனவே வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset