நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இலங்கையின் வீழ்ச்சியும் துபாயின் எழுச்சியும் தருகின்ற செய்தி..!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து திணறிக் கொண்டிருக்கின்றது. தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. பால் இல்லை. ரொட்டி இல்லை. கோதுமை இல்லை. அரிசி இல்லை. சமையல் எரிவாயு இல்லை. பெட்ரோல் இல்லை. டீசல் இல்லை. போக்குவரத்து இல்லை. மருந்து இல்லை. மாத்திரை இல்லை என இல்லைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. 

விடைத்தாள் பற்றாக்குறையின் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக அரசாங்கமே தெரு விளக்குகளை அணைத்து வைக்கின்றது. காகிதத் தட்டுப்பாடு காரணமாக நாளிதழ்கள் வெளியாவதில்லை. 

பணவீக்கம் 54 சதவீதம் வரை உயர்ந்து முழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றது.  கையாலாகாத அரசாங்கமோ 14 சதவீதம்தான் என கணக்கைத் திருத்திக் காட்டுகின்றது. அந்நிய செலாவணி கையிருப்போ இரண்டு பில்லியன் டாலராக தேங்கி நிற்கின்றது. முந்நூறு இலங்கை ரூபாய் கொடுத்தால்தான் ஒரு அமெரிக்க டாலரைப் பெற முடியும் என்கிற அளவுக்கு இலங்கை ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்துவிட்டது. 

இப்படியெல்லாம் சீரழிவுக்கு ஆளாக நேரிடும் என்று எவருமே கற்பனை செய்தும் பார்த்ததில்லை. உலக வங்கியிடமிருந்தும் சீனா, ஜப்பான், இந்தியா என்று பல்வேறு நாடுகளிடமிருந்தும் வாங்கிய கடன்சுமை என்பதா? இன்று கடன் வாங்காத நாடே உலகத்தில் இல்லையே..!

கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் சுற்றுலா பாதிப்படைந்ததால் தான் இந்தச் சரிவு என்பதா? ஒட்டுமொத்த ஜிடிபியில் 5 சதவீதம் மட்டும்தானே சுற்றுலாவின் பங்கு! அதுதான் முழுமுதல் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்?  மனம் போன போக்கில் விவசாய முறையை மாற்றி இராஜபக்சே நடைமுறைப்படுத்திய சட்டங்கள்தாம் காரணமா? என்னதான் காரணம்?

துபாயின் வளர்ச்சியிலும் எழுச்சியிலும் இதற்கான காரணத்தை அடையாளம் காண முடியும். 

இலங்கை செழிப்பாக இருந்த போது பெயர் தெரியாத மீனவக் கிராமமாக சுருண்டு கிடந்த நாடுதான் துபாய். மற்ற வளைகுடா நாடுகளைப் போன்று பெட்ரோல் வளமும் அதிகமாக இல்லை. என்றாலும் இன்று செல்வச் செழிப்பு மிக்க நாடாக, கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் மக்கள் விரும்பிச் செல்கின்ற நகரமாக, உலகத்திலேயே முதன்மையான முக்கியமான வணிக நகரமாக வானுயர்ந்து நிற்கின்றது. உலகிலேயே மிகப் பெரும் மால்களைக் கொண்டதும் துபாய்தான். உலகிலேயே மிகப் பெரும் அடுக்கு மாடிக் கட்டடம் நிற்பதும் துபாயில்தான். இன்று உலகம் முழுவதிலுமிருந்தும் திறமைசாலிகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்ற நாடுகளில் முதன்மையாக நிற்பதும் துபாய்தான். 

கொரோனாவும் பொது முடக்கமும் ஏற்படுத்திய அதிர்விலிருந்து முதலில் மீண்டு எழுந்த நாடும் துபாய்தான். ஆறு மாதங்கள் நீடித்த, இரண்டரை கோடி மக்கள் வருகை தந்த, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள், முன்னணி நாடுகள் என அனைத்தும் பங்கேற்ற மிகப் பெரும் வர்த்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதும் துபாய்தான். 

துபாயின் இந்த அசுரத்தனமான, மலைக்க வைக்கின்ற வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணம் என்ன? ஒன்று, அது குறுகிய வரையறைக்குள் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. மதம், இனம், குலம், கோத்திரம், மொழி, சாதி என எந்தவொரு வட்டத்துக்குள்ளும் அது சிக்கியிருக்கவில்லை. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டது. எல்லோருக்கும் சம வாய்ப்பையும் வசதியையும் தந்தது. 

இன்று அரபுகளை விட அரபு அல்லாதவர்களை அதிகமாகக் கொண்ட தேசம் என்கிற சிறப்பைப் பெற்றிருக்கின்றது.

முஸ்லிம்கள் மட்டுமின்றி கிறித்துவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், புத்தர்கள், ஜெயினர்கள் என எல்லாத் தரப்பினரும் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கின்ற, பறக்க வாய்ப்பிருக்கின்ற தேசம்தான் துபாய். 

அது மட்டுமல்ல வெறுப்பு, வெறுப்பரசியல் ஆகியவற்றுக்கு எதிராக உலகத்திலேயே மகிழ்ச்சிக்காக தனி அமைச்சகத்தை அமைத்ததும் துபாய்தான். அத்தோடு நின்று விடவில்லை. கஜாகிஸ்தான், காஸ்டா ரிகா, மெக்சிகோ, போர்த்துகல், ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுடன் ஒன்றிணைந்து குளோபல் ஹாப்பினஸ் கோஅலிஷன் என்கிற பெயரில் உலகளாவிய மகிழ்ச்சிக் கூட்டணியையும் அமைத்தது. 

ஆக துபாயின் வளர்ச்சியிலும் எழுச்சியிலும் அதற்குக் கிடைத்த தொலை நோக்கு நிறைந்த ஆட்சியாளர்களும் அவர்கள் கடைப்பிடித்த ‘அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கையும்’தாம் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

ஆக அந்த தொலை நோக்கு நிறைந்த ஆட்சியாளர்களும் அவர்கள் கடைப்பிடித்த ‘அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கையும்’ இல்லாமல் போனதுதான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணம். 

இலங்கைக்கு வாய்த்தவர்கள் எல்லாருமே தொலைநோக்கு இல்லாத, குறுகிய மனம் படைத்த தலைவர்கள். அவர்களிடம் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துக் கொண்டு செல்கின்ற முதிர்ச்சி இருக்கவில்லை. முதலில் தமிழர்களை குறி வைத்தார்கள். அடுத்து முஸ்லிம்களை ஒடுக்கினார்கள். இப்போது சொந்த மக்களையே வாட்டியெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்த வெறுப்பரசியலுக்கும் வன்மமும் குறுகிய பார்வையைக் கொண்ட சின்ன புத்திக்கும் அடையாளமாக இராஜபக்சே நிற்கின்றார். குடும்ப நலன்களை மையமாகக் கொண்ட அரசு நடவடிக்கைகள், மக்களைப் பிளவுபடுத்துகின்ற அரசியல் ஆகிய இரண்டுடன் இடித்துரைக்கின்ற வல்லுநர்களோ, மூத்த தலைவர்களோ, ஊடகமோ எதுவுமே தலையெடுக்காமலும் பார்த்துக் கொண்டார் இராஜபக்சே. 

இலங்கையை தன்னுடைய அப்பன் வீட்டுச் சொத்தாக கையாண்டார். கலந்தாலோசித்து செயல்படுகின்ற வழிமுறை இல்லை. மற்றவர்களுக்கு யாதொன்றிலும் இடம் தரப்படவில்லை. அதிபர், பிரதமர், நிதி, உள்துறை என எல்லாத் துறைகளிலும் இராஜபக்சேக்கள்தாம் ஆக்கிரமித்திருந்தனர்.

நாட்டின் ஒட்டுமொத்த நிதியில் 75 சதவீதத்தை தீர்மானிக்கின்ற அதிகாரம் படைத்தவர்களாக இராஜபக்சே குடும்பம் ஆதிக்கம் செலுத்தியது. அவர்களுக்கு தொலைநோக்கோ, தேசிய நலன்கள் பற்றிய பார்வையோ இருக்கவில்லை. நாட்டுக்கு என்ன பயன் என்பதைக் காட்டிலும் எத்தனை கமிஷன்களை வெட்டலாம் என்பதில்தான் குறியாக இருந்தார்கள்.

இதனால் ஏராளமான வெள்ளை யானை திட்டங்களை - அதிக செலவு பிடிக்கின்ற, அற்பமான பயன்களைத் தருகின்ற திட்டங்களை - மேற்கொள்வற்காக கடனுக்கு மேல் கடனாக வாங்கிக் குவித்தார்கள். 

இவற்றையெல்லாம் இடித்துரைக்க வேண்டியவர்கள் எவருமே இல்லாமல் போனார்கள். ஊடகமோ இராஜபக்சே குடும்பத்தின் ஊதுகுழலாகவே ஆகிப் போனது. 

ஆக, இலங்கையின் வீழ்ச்சியில் குடும்பம், தனிமனிதர்களின் கைகளில் அதிகாரம் சென்றதும் தொலைநோக்கோ, மக்கள் நலன் பற்றிய அக்கறையோ இல்லாதவர்களாய் ஆட்சியாளர்கள் இயங்கியதும் மக்களாட்சியின் தூண்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆளும் குடும்பத்தின் அறிவிக்கப்படாத அடிமைகளாய் மாறிப் போனதும்தாம் காரணம்.

ஆக, அனைவரையும் அரவணைக்கின்ற சமூக, அரசியல் மாடலைக் கொண்ட துபாயின் வளர்ச்சியிலும் வெறுப்பு, வன்மம், சுயநலம், குடும்பநலம் ஆகியவற்றை உயிரோட்டமாகக் கொண்ட மாடலைக் கொண்ட இலங்கையின் வீழ்ச்சியிலும் இந்தியாவுக்கும் இதர நாடுகளுக்கும் மிகப் பெரும் செய்தி இருக்கின்றது.

- லுத்ஃபி

தொடர்புடைய செய்திகள்

+ - reset