நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவின் எதிர்காலம் நமது பொறுப்பு; வெறுப்பை நிராகரித்து, ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் தேர்ந்தெடுங்கள்: குணராஜ்

அலோர்காஜா:

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வரும் வேளையில், தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும்  நாளை வெளியே வந்து தத்தமது ஜனநாயகப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை வலியுறுத்தினார்.

மலாக்கா மாநிலத்தின் திசையையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் ஒவ்வொரு வாக்கும் மிகவும் அர்த்தமுள்ளதாகும்.

இந்தத் தேர்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, நமது குழந்தைகளின் எதிர்காலத்தையும், நமது குடும்பங்களின் நல்வாழ்வையும், வருங்கால சந்ததியினருக்கு நாம் வழங்க விரும்பும் வாய்ப்புகளையும் தீர்மானிக்கிறது.

வெறுப்பை நிராகரித்து, ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் வெறுப்புச் செய்திகள், இனவாதத் தூண்டுதல்கள் மற்றும் பிளவுபடுத்தும் அறிக்கைகள் பரவுவது குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

இத்தகைய கலாச்சாரம் நமது சமூகத்தில் ஊக்குவிக்கப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது அதற்கு இடம் கொடுக்கப்படவோ கூடாது.

நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இனம், மதம், பின்னணி பேதமின்றி, நாம் அனைவரும் ஒரே தாய்நாட்டைப் பகிர்ந்து கொள்கிறோம்.

மலேசியா தொடர்ந்து அமைதியாகவும், செழிப்பாகவும், வளமாகவும் இருக்க வேண்டும் என்பதே நமது ஒரே லட்சியம்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாகும்.

இருப்பினும், வெறுப்பைப் பரப்பவோ, பகைமையைத் தூண்டவோ அல்லது இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான உறவுகளைச் சேதப்படுத்தவோ அவற்றை ஒரு சாக்காகப் பயன்படுத்த முடியாது.

மக்களைப் பிரிக்கும் நோக்கம் கொண்ட அனைத்து முயற்சிகளையும் நாம் நிராகரிப்போம்.

அதற்குப் பதிலாக, நாம் பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பன்முகத்தன்மையை மதித்து, ஒவ்வொரு சமூகத்தையும் மதிக்கும் ஒரு மலேசியாவில் வளர நமது குழந்தைகளுக்கு உரிமை உண்டு.

மலக்காவின் எதிர்காலத்திற்கான முன்னுரிமைகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான சில விவகாரங்கள்:

• கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பள்ளி வசதிகளை மேம்படுத்துதல், இளைய தலைமுறைக்குத் திறன் பயிற்சி அளித்தல்.

• மேலும் தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தொழிற்கல்வி, தொழில் மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்துதல்.

• குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான உதவிகள்.

• முதலீடுகளை ஈர்ப்பது, சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவது, உள்ளூர் தொழில்முனைவோர், வணிகங்களுக்கு உதவுவது.

• சாலைகள், வடிகால் அமைப்புகள், வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல்.

• சுகாதார சேவைகளை மேம்படுத்துவது, முதியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் தொடர்ந்து உதவி செய்வது.

• அரசியல் நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், வளர்ச்சித் திட்டச் செயலாக்கத்தின் தொடர்ச்சியை உறுதி செய்தல்.

மக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி முன்னெடுப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் தொடரப்பட வேண்டிய பல திட்டங்கள் இன்னும் உள்ளன.

இந்த வளர்ச்சி முயற்சிகள் அனைத்தும் தொடர்ச்சியாக இருப்பதையும், மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

நாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தைப் பின்பற்றுவோம், கருத்து வேறுபாடுகளை மதிப்போம்.

மேலும் ஒவ்வொரு வேட்பாளரையும் அவர்களின் கொள்கைகள், சேவைப் பதிவுகள் மற்றும் மக்கள் மீதான அர்ப்பணிப்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்வோம்.

வெறுப்பு நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க விடாதீர்கள்.

அதற்குப் பதிலாக, ஒற்றுமை, நல்லிணக்கம், பகிரப்பட்ட செழிப்புக்கு முன்னுரிமை அளிப்போம் என்று கெஅடிலான் மத்திய செயலவை உறுப்பினருமான டாக்டர் குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset