நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸில் தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; பிரதமர் தலைமையேற்கிறார்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர்:

தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு வரும் நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். 


அவர் காலை 11 மணிக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

மலேசிய அரசாங்கத்தின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சி, பல்வேறு இன, சமய மற்றும் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட மலேசியர்கள் ஒன்றிணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவதற்கு மலேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனம் (மைக்கி), பிரிக்பீல்ட்ஸ் வர்த்தக சங்கம் வணிக அமைப்புகள் ஆகியவை ஆதரவு வழங்குகின்றன.

ஒளித் திருநாளான தீபாவளி, கலாசாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதுடன், தேசிய ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆண்டின் கொண்டாட்டம் அமைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இந்தியச் சமூகத்தின் பல்வேறு உப இனப் பிரிவுகளின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் மரபுகளை அறிமுகப்படுத்தும் 'ருமா காமி' எனும் சிறப்புக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் மலேசிய இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையையும், நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் ஆற்றியுள்ள பங்களிப்புகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும், இளைய தலைமுறையினர், பள்ளி மாணவர்கள், கலை, கலாசாரக் குழுக்களின் பங்கேற்புடன் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் சமூக நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

இத்தகைய நிகழ்ச்சிகள் இளைய தலைமுறையினரிடையே கலாசாரப் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பல்வேறு சமூக மக்களுக்கிடையிலான நல்லுறவையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம், தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கொண்டாட்டம் எடுத்துக்காட்டுகிறது.

எனவே, அனைத்து இன மக்களும் குடும்பத்துடன் வருகை தந்து, தீபாவளித் திருநாளை ஒற்றுமை, நல்லிணக்கம், மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset