நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரைக்குப் பின்னால் நடக்கும் இணைய பகிடிவதை மிரட்டல்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

திரைக்குப் பின்னால் நடைபெறும் இணையவழி பகிடிவதை தாக்குதல்கள் ஒருவரின் வாழ்க்கையையே சீரழிக்கக்கூடும் என்பதால், இணையவழி மிரட்டல்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவும் அவதூறுகள், மிரட்டல்கள், தொடர் விமர்சனங்கள் ஒருவரின் மனநலத்தையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

சிலாங்கூரில் அண்மையில் உயிரிழந்த கணவன், மனைவி இருவரும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து தாக்குதல்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம், இணையவழித் துன்புறுத்தலின் தீவிரத்தை உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கும் அவர்களின் மரணத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பதை காவல்துறை விசாரித்து உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த 2023 ஜனவரி முதல் 2026 அக்டோபர் வரை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்திற்கு (எம்சிஎம்சி) இணையவழித் துன்புறுத்தல் தொடர்பாக 5,341 புகார்கள் கிடைத்துள்ளன.

2022 முதல் இதுவரை 60,632 இணையவழி மிரட்டல் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2026ஆம் ஆண்டில் மட்டும் 47,412 பதிவுகள் நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இணையவழித் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களை மேலும் கடுமையாக்குவதுடன், அதிக அபராதம், நீண்டகால சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்.

மேலும் சமூக ஊடக நிறுவனங்கள் இத்தகைய பதிவுகளை விரைவாக அகற்றுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மனநல, சட்ட உதவிகளை வழங்குவதுடன், பள்ளிகளில் சிறுவயதிலிருந்தே இணையப் பாதுகாப்பு, பொறுப்பான சமூக ஊடகப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திரைக்குப் பின்னால் இருப்பவர் ஒரு உண்மையான மனிதர் என்பதை உணர்ந்து, கோபத்தைவிட மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிப்போம் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset