நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குற்றவாளிகளுக்கு வீட்டுக் காவல்: புதிய சட்டம் இயற்ற முஹம்மத் சாபு வலியுறுத்தல்

கோலாலம்பூர்: 

குற்றவாளிகள் தங்களுடைய சிறைத் தண்டனையில் பாதியை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முஹம்மத் சாபு தெரிவித்துள்ளார்.

நீதி என்பது குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டும் சொந்தமான உரிமையாக மாறிவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சட்டச் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு (NGO) நிதி உதவி வழங்க, நடப்பு நாடாளுமன்றத் தவணையின் எஞ்சிய காலத்திற்கான தமது முழு அமைச்சுச் சம்பளத்தையும் நன்கொடையாக வழங்கத் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும் அமானா கட்சியின் தலைவருமான முகமட் சாபு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான தனிப்பட்டக் கசப்புணர்வின் காரணமாக இந்த நிலைப்பாட்டைத் தாம் எடுக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் அடிப்படைக் கோட்பாடு பதவி, அரசியல் செல்வாக்கு அல்லது குடும்பத் தொடர்புகளின் அடிப்படையில் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், மலேசியாவில் இருவேறு நீதிமுறைகள் நடைமுறையில் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

முன்னதாக, எஸ்சிஆர் இன்டர்நேஷனல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள நஜிப் ரசாக், தமது எஞ்சிய சிறைத் தண்டனையை வரும் 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்து உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

எஸ்சிஆர் இன்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பில் அதிகாரத் துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக விதிக்கப்பட்ட தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதிசெய்ததைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் நஜிப் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், 2024 ஜனவரியில் அப்போதைய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அவரது சிறைத் தண்டனையைப் பாதியாகக் குறைத்து, அபராதத்தை 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போதைய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நஜிப் எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்கக் கூடுதல் மன்னிப்பு வழங்கினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset