நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பணவீக்கம் குறைந்தும் விலைகள் அதிகமாக இருப்பதாக மலேசியர்கள் உணர காரணம் என்ன? பேங்க் நெகாரா விளக்கம்

கோலாலம்பூர்:

மலேசியாவில் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. ஆனால், அது குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு குறைந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை என பேங்க் நெகாரா மலேசியா விளக்கியுள்ளது.நுகர்வோர் விலை குறியீடு எனப்படும் CPI, ஒரு குறிப்பிட்ட பொருட்கள் கூடையின் சராசரி விலை மாற்றத்தை மட்டுமே கணக்கிடுகிறது.

ஒவ்வொரு குடும்பத்தின் செலவு முறை, வருமான நிலை, நிதி கடமைகள் ஆகியவற்றை அது முழுமையாக காட்டுவதில்லை.அதனால்தான் அதிகாரப்பூர்வ பணவீக்க எண்கள் குறைந்து வருவதாக காட்டினாலும், மக்கள் இன்னும் நிதி நெருக்கடியை உணர்கிறார்கள்.

பணவீக்கம் என்றால் என்ன?பேங்க் நெகாராவின் “Beyond the Headline: Inflation through the Eyes of Households” என்ற கட்டுரையில், பணவீக்கம் என்பது விலைகள் எந்த வேகத்தில் உயர்கின்றன என்பதை காட்டுகிறது, விலைகள் எவ்வளவு உயர்ந்துவிட்டன என்பதை அல்ல என விளக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை ஆண்டு அறிக்கை 2025-இல் வெளியானது. மலேசியாவின் தலைப்பு பணவீக்கம் 2025-இல் சராசரியாக 1.4% ஆக இருந்தது. இது ஐந்து ஆண்டுகளில் மிக குறைவு.

ஆனால், அதிக வாழ்க்கைச் செலவு பல குடும்பங்களுக்கு இன்னும் பெரிய கவலையாக உள்ளது என மத்திய வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

2026-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பணவீக்கம் சராசரியாக 1.8% ஆக இருந்தது. அடிப்படை பணவீக்கம் 2% ஆக இருந்தது.

அடிக்கடி வாங்கும் பொருட்கள் தான் காரணம், மக்கள் விலை மாற்றத்தை உணரும் விதம் ஒரு காரணம்.

குறிப்பாக அடிக்கடி வாங்கும் உணவு, பானங்கள் போன்ற பொருட்களின் விலை, மக்களின் பணவீக்க உணர்வில் அதிக தாக்கம் ஏற்படுத்துகிறது.

இதை இரண்டு விதமாக பேங்க் நெகாரா விளக்குகிறது:

1. அடிக்கடி வாங்கும் பழக்கம் - Frequency Bias
அடிக்கடி வாங்கும் உணவு, பெட்ரோல் போன்றவற்றின் விலை மாற்றத்தை மக்கள் அதிகம் கவனிக்கிறார்கள். அரிதாக வாங்கும் டிவி போன்ற பொருட்களின் விலையை கவனிப்பது குறைவு.

2. நினைவு சார்பு - Memory Bias
விலை உயர்வு மனதில் அதிகமாக, நீண்ட நாள் பதிகிறது. விலை குறைவு அந்த அளவு நினைவில் நிற்பதில்லை.

இதை கணக்கிட, பேங்க் நெகாரா Everyday Price Index, Perceived Price Index ஆகியவற்றை பயன்படுத்துகிறது. Perceived Price Index-இல் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே சேர்க்கப்படும். விலை குறைந்த பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை.

அதனால் அது பெரும்பாலும் CPI-ஐ விட அதிகமாக காட்டும்.உண்மையான பிரச்சினை: வாங்கும் சக்திபேங்க் நெகாரா சொல்வது: பணவீக்கத்தை அளப்பதை விட முக்கியமானது,

குடும்ப வருமானம் விலை உயர்வுக்கு ஏற்ப வளர்கிறதா என்பதுதான்.2019 முதல் 2024 வரை, மலேசியாவின் தலைப்பு CPI 9.3% உயர்ந்தது. அதே காலத்தில் ஒரு தொழிலாளிக்கான சராசரி சம்பளம் 7.2% மட்டுமே உயர்ந்தது.

அதாவது, அதே பொருட்கள் கூடையை வாங்க சராசரி நபர் அதிக மணி நேரம் வேலை செய்ய வேண்டும். உணவு விஷயத்தில் இது தெளிவாக தெரிகிறது.

சமீப ஆண்டுகளில் சம்பளத்தை விட விலைகள் வேகமாக உயர்ந்ததால், வழக்கமான உணவு செலவை சமாளிக்க குடும்பங்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.

பேங்க் நெகாராவின் நிலைப்பாடு குறைந்த, நிலையான பணவீக்கத்தை உறுதி செய்வது மத்திய வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.ஆனால், பணக் கொள்கை மட்டுமே வாங்கும் சக்தியை முழுமையாக பாதுகாக்க முடியாது.

குடும்ப நலன் சம்பள வளர்ச்சி, உற்பத்தித் திறன், ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவு போக்கு ஆகியவற்றாலும் தீர்மானிக்கப்படுகிறது.

“பணவீக்கம் மிதமாக இருந்தாலும், சம்பள வளர்ச்சி மெதுவாக இருப்பதால் பல குடும்பங்கள் அதிக வாழ்க்கைச் செலவுடன் போராடி வருகின்றன” என மத்திய வங்கி கூறியுள்ளது.

வாழ்க்கை தரம் உயர, வருமான வளர்ச்சி விலை உயர்வை விட வேகமாக இருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

எளிய உதாரணம்:

நாசி லெமாக் ஒரு தட்டு நாசி லெமாக் RM5 ஆக இருந்து, அடுத்த ஆண்டு RM5.50  ஆனால் அது 10% உயர்வு.

அதற்கு அடுத்த ஆண்டு RM5.61 ஆனால் அது 2% உயர்வு மட்டுமே.பணவீக்கம் 10%-இல் இருந்து 2%-ஆக குறைந்தாலும், நாசி லெமாக் விலை RM5.61-ஆகவே உள்ளது. அது RM5-க்கு திரும்பவில்லை.பணவீக்கம் குறைவது என்றால் விலைகள் மெதுவாக உயர்கின்றன என்று அர்த்தம். விலைகள் குறைகின்றன என்று அர்த்தம் இல்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset