நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னருக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை: AGC சட்டத் துறை அலுவலகம் விளக்கம்

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் விவகாரத்தில், மாமன்னரின் மன்னிப்பு உத்தரவை தாங்கள் மீறவில்லை என்று சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் (AGC) மறுத்துள்ளது.

வீட்டுக்காவலை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரியது, அரச உத்தரவை தடுப்பதற்காக அல்ல, சட்டரீதியான குழப்பங்களை தீர்ப்பதற்காகவே என்று AGC விளக்கம் அளித்துள்ளது. 

செப்டம்பர் 18-ஆம் தேதி யாங் டி-பெர்துவான் அகோங் - பேரரசர் வழங்கிய நிபந்தனை மன்னிப்பு உத்தரவை தான் எதிர்க்கவோ, நிறுத்தி வைக்கவோ இல்லை என்றும், சட்டத் துறைத் தலைவர் தனது அதிகாரத்தை மீறினார், அரச உத்தரவை புறக்கணித்தார், நஜிப்பை சட்டவிரோதமாக தடுத்து வைத்தார் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் AGC தெரிவித்துள்ளது. 

நஜிப்பின் வழக்கறிஞர்கள் Shafee & Co. வெள்ளிக்கிழமை வெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஜாங் சிறையிலிருந்து நஜிப்பை வீட்டுக்காவலுக்கு மாற்றுவதை AGC தற்காலிகமாக ஒத்திவைத்ததற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், இஸ்தானா நெகாரா இன்று வெளியிட்ட அறிக்கையில், SRC International வழக்கில் மீதமுள்ள தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் அரசரின் நிபந்தனை மன்னிப்பு தெளிவானது என்றும் சந்தேகத்திற்கு இடமில்லாதது என்றும், அதன் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்றும் கூறியிருந்தது. 

அந்த உத்தரவை எதிர்ப்பது அரசரின் உத்தரவை மீறுவதற்கு சமம் என்றும் அரண்மனை எச்சரித்திருந்தது. 

AGCயின் முக்கிய வாதம் என்ன?

பிரச்சினை அரசரின் மன்னிப்பு செல்லுமா இல்லையா என்பது அல்ல. மாறாக, நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு (Order of Discharge) நஜிப்பின் மீதமுள்ள SRC தண்டனை மீது என்ன சட்ட விளைவை ஏற்படுத்தும் என்பதே என்கிறது AGC.

நவம்பர் 6-ஆம் தேதி RM50 மில்லியன் அபராதம் செலுத்தப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றம் வெளியிட்ட விடுதலை உத்தரவு, நஜிப்பை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. 

அதே நேரத்தில், 2028 ஆகஸ்ட் 23 வரை மீதமுள்ள SRC தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க வேண்டும் என்றும் அது கூறியது. இதனால் இரண்டு விதமான சட்ட விளக்கங்கள் எழுந்துள்ளதாக AGC கூறுகிறது. 

1. முதல் விளக்கம்:

SRC தண்டனை இன்னும் அமலில் இருந்தால், மீதமுள்ள காலத்தை நிபந்தனை மன்னிப்பின்படி வீட்டுக்காவலில் அனுபவிக்க வேண்டும்.

2. இரண்டாவது விளக்கம்: 

SRC தண்டனை சட்டப்படி முடிந்துவிட்டது என்று நீதிமன்றம் கூறினால், அப்போது நஜிப்பின் தனியான 15 ஆண்டு 1MDB சிறைத் தண்டனை இப்போது தொடங்க வேண்டுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

ஏனெனில் 1MDB தண்டனை, SRC தண்டனை முடிந்த பிறகுதான் தொடங்கும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. 

"இரண்டு சாத்தியங்களும் வெவ்வேறு சட்ட விளைவுகளை கொண்டவை. அவற்றை அனுமானங்கள் அல்லது ஒருதலைப்பட்ச விளக்கத்தின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடாது" என்று AGC கூறியுள்ளது. 

எனவே, நிபந்தனை மன்னிப்பையும் 1MDB தண்டனையையும் சரியாக அமல்படுத்தவும், நஜிப்பின் சட்ட உரிமைகளை பாதுகாக்கவும் அவசரமாக நீதிமன்ற தீர்ப்பு தேவை என்று AGC வலியுறுத்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset