நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையவழி சூதாட்டம், சட்டவிரோத லாட்டரிகளுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கையில் 282 பேர் கைது

கோலாலம்பூர்:

வார இறுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், இணையவழி சூதாட்டம், உரிமம் பெறாத லாட்டரிச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 201 வணிக வளாகங்களில் 282 பேர் கைது செய்யப்பட்டனர்; மேலும், 32,149 ரிங்கிட் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.

'ஆப்ஸ் டாடு காஸ்' (Ops Dadu Khas) என்று பெயரிடப்பட்ட இந்த இரு நாள் நடவடிக்கை, அக்டோபர் 31 முதல் நவம்பர் 1 வரை சபா, சரவாக் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

மொத்தம் 201 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 108 இடங்கள் இணையவழி சூதாட்டச் செயல்பாடுகளுடனும், 93 இடங்கள் உரிமம் பெறாத பொது லாட்டரிச் செயல்பாடுகளுடனும் தொடர்புடையவை என்றும் அவர் கூறினார்.

"கைது செய்யப்பட்ட 282 நபர்களும் 20 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர்கள்; இவர்களில் 229 பேர் ஆண்கள், 53 பேர் பெண்கள் ஆவர்.

"இவர்களில் 223 பேர் மலேசியர்கள்; மீதமுள்ள 59 பேர் இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள். இவர்கள் உள்ளூர் சூதாட்டக் கும்பல்களால் பணியமர்த்தப்பட்டிருந்தனர்," என்று புக்கிட் அமான் மெனாரா 2-இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோத சூதாட்டச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் டேப்லெட்டுகள், அலைபேசிகள் மற்றும் கையடக்க அச்சுப்பொறிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும் மின்னணு சாதனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக குமார் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset