நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BANANA BRO, BOAT NOODLES உணவகங்களின் நிறுவனர் டோனி லிம் காலமானார்

கோலாலம்பூர்:

மலேசியாவின் பிரபல உணவகச் சங்கிலிகளான 'பனானா புரோ' (BananaBro) மற்றும் 'போட் நூடில்' (Boat Noodle) ஆகியவற்றின் நிறுவனருமான தொழிலதிபர் டோனி லிம் காலமானார்.

இவரது மறைவு நாட்டின் உணவு மற்றும் பானங்கள் (F&B) துறைக்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

டோனி லிம்மின் மறைவு குறித்த செய்தியை, இவ்விரு உணவக நிர்வாகங்களும் திங்கள்கிழமை அன்று தங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இரங்கல் அறிக்கையாகப் பகிர்ந்துள்ளன.

இது குறித்து பனானா புரோ வெளியிட்ட அறிக்கையில், மலேசியாவின் பாரம்பரிய வாழை இலை விருந்து கலாச்சாரத்தைச் சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் பேராவல் கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வையாளராக டோனி லிம் நினைவுகூரப்படுகிறார்.

தொழிலை வெற்றிகரமாகக் கொண்டு சென்றது மட்டுமன்றி, தம் நிறுவன ஊழியர்களின் நலனிலும், தன் கனவுக்குத் தோள்கொடுத்த ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் அவர் எப்போதும் உறுதுணையாக இருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-இல் 'போட் நூடில்' உணவகத்தைத் தொடங்கியதன் மூலம் டோனி லிம் F&B துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தாய்லாந்தின் பிரபல தெருவோர உணவை மலேசியர்களுக்கு அறிமுகப்படுத்திய இந்த உணவகம், சிறிய கிண்ணங்களில் நூடில்ஸ் பரிமாறும் பாணியால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பலவிதமான சுவைகளை ருசிக்க இது வாய்ப்பளித்தது. உணவருந்திய பிறகு காலியான கிண்ணங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் பழக்கம், இந்த உணவகத்தின் தனித்துவ அடையாளமாகவே மாறியது.

அதன் தொடர்ச்சியாக, 2018-ஆம் ஆண்டில் 'பனானா புரோ' உணவகத்தை அவர் அறிமுகப்படுத்தினார். நவீனம், விரைவான சேவை மற்றும் நியாயமான விலையில் வாழை இலை உணவை அனைவருக்கும் வழங்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில், இதமான சூழலில் பல வகையான சுவையான கறிகளுடன் வாழை இலைச் சோற்றை இந்த உணவகம் வழங்கியது.

தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளிலேயே பனானா புரோ மலேசியா முழுவதும் 30-க்கும் மேற்பட்ட கிளைகளாக விரிவடைந்தது.

மேலும், 2023-ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 70 மில்லியன் ரிங்கிட் வருவாயைப் பதிவு செய்து, உள்ளூர் சந்தையில் அதிவேக வளர்ச்சியைக் கண்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset