நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசுப் பணிகளில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவு; நிலைமையைச் சீரமைக்க சிறப்புத் திட்டம் தேவை: ACE வலியுறுத்தல்

கோலாலம்பூர்:

அரசாங்கத்தின் கீழ் செயல்படும் அரசுப் பணிகளில் இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைவாக இருப்பது கவலையளிக்கிறது.

இந்த நிலைமையைச் சீரமைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பின் (ACE) தலைவர் சி. பசுபதி வலியுறுத்தினார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவில் மொத்தம் 13 லட்சத்து 2 ஆயிரத்து 713 அரசுப் பணியாளர்கள் உள்ளனர்.

இவர்களில் இந்தியர்கள் வெறும் 3.63 விழுக்காடு, அதாவது 47,349 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் 41,891 பேர் கூட்டரசு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், கூட்டரசு அரசுப் பணிகளில் உள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் மூன்று அமைச்சுகளில் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

கல்வியமைச்சில் 21,773 பேரும், சுகாதார அமைச்சில் 14,758 பேரும், உயர்கல்வி அமைச்சில் 1,882 பேரும் பணியாற்றுகின்றனர்.

ஏனைய  அமைச்சுகள், அரசுத் துறைகள் அனைத்திலும் சேர்த்து வெறும் 3,478 இந்தியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

இது கூட்டரசு அரசுப் பணிகளில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் சமநிலையற்ற நிலையில் இருப்பதைத் தெளிவாகக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியர்களின் அரசுப் பணி நியமனங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களும் கவலைக்குரியதாக உள்ளன.

2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு காலத்தில், பொதுச் சேவை ஆணையத்திடம் இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து மொத்தம் 1,94,807 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இவர்களில் 15,875 பேர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இது மொத்த விண்ணப்பதாரர்களில் 8.15 விழுக்காடாகும்.

நேர்காணலில் பங்கேற்றவர்களில் 5,289 பேர் மட்டுமே அரசுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்த விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் விகிதம் வெறும் 2.71 விழுக்காடாக உள்ளது.

பொதுச் சேவை ஆணையத்தின் தகுதி நிபந்தனைகளைச் சில விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம் என்பதையும் அரசுப் பணிகளுக்கான போட்டி கடுமையாக இருப்பதையும் ACE ஏற்றுக் கொண்டுள்ளது.

இருப்பினும், தகுதியான இந்தியர்களுக்கு அரசுப் பணி வாய்ப்புகளை அதிகரிக்க அரசாங்கம் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்கள் பல்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னடைவுகளை எதிர்கொள்வதால், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றமும் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அரசுப் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு மட்டுமல்ல. அது நிலையான வருமானம், தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான முக்கிய வாய்ப்பாகவும் அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் அணுகுமுறையில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவை
சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் நிலையை மேம்படுத்துவதற்காக உயர்கல்வித் துறையில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகளும் பூமிபுத்ரா இடஒதுக்கீட்டு முறைகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்ற நெகிழ்வுத்தன்மையும் சமூகப் பொறுப்புணர்வும் அரசுப் பணிகளை நாடும் சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மலேசிய இந்தியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பசுபதி வலியுறுத்தினார்.

- பார்த்திபன் பார்த்திபன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset