நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குற்றச் செயல்களுக்காக ஆலயங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மலேசிய இந்து சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது: தங்க கணேசன்

கோலாலம்பூர்:

குற்றச் செயல்களுக்காக ஆலயங்கள்  தவறாகப் பயன்படுத்தப்படுவதை மலேசிய இந்து சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அதன் தலைவர் தங்க கணேசன் கூறினார்.

சிலாங்கூர் மாநிலம், கிள்ளானில் இந்து ஆலயமாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வளாகத்தில், போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டவிரோத போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான அண்மைய செய்திகளை மலேசிய இந்து சங்கம் மிகுந்த கவலையுடனும் தீவிரத்துடனும் அணுகுகிறது.

குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் மலேசிய இந்து சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

வழிபாட்டுத் தலங்கள் எந்தச் சூழ்நிலையிலும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதைச் சங்கம் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. 

இத்தகைய செயல்கள் இந்து சமயம் போற்றிப் பாதுகாக்கும் சமய, அறநெறி மற்றும் ஆன்மிக விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானவையாகும்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை ஒழிப்பதில் மலேசிய அரச காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மலேசிய இந்து சங்கம் பாராட்டுவதுடன், இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதற்குத் தனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறது. 

குற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் என நிரூபிக்கப்படும் எவரும், அவர்களின் சமயம், பதவி அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும், சட்டத்தின் முழுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளையில், குறிப்பிட்ட சில தனிநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துடனோ அல்லது மலேசியா முழுவதுமுள்ள இந்து ஆலயங்களுடனோ தொடர்புபடுத்துவதும், பொதுமைப்படுத்துவதும் முற்றிலும் தவறானது என்பதை மலேசிய இந்து சங்கம் உறுதியாக வலியுறுத்துகிறது.

சம்பந்தப்பட்ட வளாகத்தின் பதிவு நிலை மற்றும் நில உரிமை தொடர்பாக வெளியான தகவல்களையும், தற்போது விசாரணைக்கு உட்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் தனித்தனியாக அணுக வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களின் பதிவு, நிறுவல் அல்லது நில உரிமை தொடர்பான விவகாரங்கள் தனித்துவமான நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டவையாகும். 

அவை உரிய வழிமுறைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டியவை. இத்தகைய நிர்வாக அல்லது நில உரிமைச் சிக்கல்கள் இருப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அங்கு குற்றச் செயல்கள் நடைபெறுவதாகக் கருதுவது முறையற்றதாகும்.

மேலும், இந்து சமய விவகாரங்களுடன் நேரடித் தொடர்பில்லாதவர்கள் உட்பட, தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும், இச்சம்பவத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்து ஆலயங்கள், இந்து சமுதாயத்தின் மீது பொதுப்படையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையும், இழிவான முத்திரைகளைக் குத்துவதையும், ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதையும் தவிர்க்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கடுமையாக எச்சரிக்கிறது. 

தனிநபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஓர் ஒட்டுமொத்த சமயத்தையோ அதன் வழிபாட்டுத் தலங்களையோ இழிவுபடுத்துவதற்கான காரணமாக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

பொதுநலன் சார்ந்த விவகாரங்களில் கருத்துத் தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. 

இருப்பினும், அத்தகைய கருத்துகள் உண்மையான தகவல்கள், பொறுப்புணர்வு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்.

இந்து சமய நிறுவனங்கள் மீது நியாயமற்ற முறையில் களங்கம் ஏற்படுத்தும் அல்லது இந்து சமுதாயத்தின் கண்ணியத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் பொறுப்பற்ற கருத்துகளையும் பிரசாரங்களையும் மலேசிய இந்து சங்கம் ஒருபோதும் மௌனமாக ஏற்றுக்கொள்ளாது.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கும் நியாயமான சட்டரீதியான கேள்விகளுக்கும் இடமுண்டு. ஆனால், சமய உணர்வுகளைத் தூண்டும் பேச்சுகள், பாரபட்சமான பொதுமைப்படுத்தல்கள் மற்றும் சமய உணர்வுகளைப் பரபரப்பாக்கும் முயற்சிகளுக்கு மலேசியாவின் பல்லின, பல்சமயச் சமூகத்தில் இடமில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset