நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு திரையுலக சிற்பி: டத்தோஸ்ரீ எம்.சரவணன் புகழாரம்

பத்து கேவ்ஸ்: 

இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு திரையுலக சிற்பி என்றும் அவரின் திரைத்துறை பங்களிப்புகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் புகழாரம் சூட்டினார்.

தமிழ் சினிமா எல்லைகளை உடைத்து, தன் கற்பனைச் சிறகுகளால் இந்தியத் திரையுலகையே வியக்க வைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, தமிழ் மண்ணின் கலைத் தூணுக்கு மரியாதை செலுத்தும் அற்புதமான மாலைப் பொழுது, மண்வாசனை தந்த “இயக்குனர் இமயம்” பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை புகழஞ்சலி. நிகழ்ச்சியை தலைமை தாங்கி தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி.

‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா என்ற அந்த ஒரு பெயர், வெறும் பெயரல்ல, அது தமிழ்த் திரையுலகின் மறுமலர்ச்சி, மறுபக்கத்தின் முகவரி; மண்ணின் வாசம் தந்த மாபெரும் இயக்குனர் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.

பாரதிராஜா என்ற கலைஞன் நமக்குத் தந்தது வெறும் திரைப்படங்களை மட்டுமல்ல, தமிழ் மக்களின் வாழ்வியலை, உணர்வுகளை, காதலை, பாசத்தை, இந்த மண்ணின் பெருமையை உலகறியச் செய்த மகத்தான அடையாளத்தை. அவரது கலைப்பயணம் என்றும் அழியாது. அவர் விட்டுச்சென்ற மண்வாசனை தமிழ் சினிமாவின் சுவாசக் காற்றாய் என்றும் நிலைத்திருக்கும்.

​​1977 முதல் தனது இறுதி பயணம் வரை தமிழ் திரைக்காக தனது பங்களிப்பை வழங்கி சென்றார். 

நகரத்தில் இருந்த தமிழ் சினிமாவை கிராமங்களில் எடுத்து சென்றவர் பல புதிய முகங்கள் தமிழ்ச்சினிமாவிற்குக் கொடுத்தார் என்று அவர் கூறினார். 

காலஞ்சென்ற ம.இ.கா தேசிய தலைவர் துன் ச.சாமிவேலு அவர்களின் நெருங்கிய நண்பராக இயக்குநர் இமயம் பாரதிராஜா விளங்கினார்

அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள் அனைத்தும் அவரின் இயக்கத்தில் வந்த சிறந்த திரைப்படங்களாகும் 

முன்னதாக, பத்துகேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் நடைபெற்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்திரைப்பட , தமிழ்த்தொடர் ஆளுமையான நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset