செய்திகள் மலேசியா
எண்ணெய் கலப்பைக் கட்டுப்படுத்தும் விவகாரம்; மலேசியாவின் நற்பெயரை காக்க கடுமையான ஆவணங்களும் தேவை: நிபுணர்கள்
கோலாலம்பூர்:
சட்டத்திற்கு இணங்குவதையும், பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக, எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள், தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் தேவைப்படும்போது சுங்கத்துறை தலைமை இயக்குநரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும்.
அத்துடன் முழுமையான ஆவணங்களின் ஆதரவையும் கொண்டிருக்க வேண்டும் என்று கடல்சார் கொள்கை, சட்ட நிபுணரும், சுங்கத் துறை எல்லை தாண்டிய வர்த்தக நிபுணருமான டாக்டர் மட்ஸ்லி ஹருண் கூறினார்.
எண்ணெய் இறக்குமதி, சேமிப்பு, கலத்தல், மறு ஏற்றுமதி தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் உரிமத்தின் வரம்பு மற்றும் அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.
கலப்பு நடவடிக்கைகள் ஒரு பொருளின் கலவை, விவரக்குறிப்புகளை மாற்றக்கூடும், எனவே செயல்முறைக்கு முன்னும் பின்னும் பொருளின் அளவு, அதன் நகர்வு, நிலையை உறுதிப்படுத்த தெளிவான பதிவுகள் தேவை.
மேலும் ஒப்பந்தங்கள், சரக்குச் சீட்டுகள், சரக்கு விவரப் பட்டியல்கள் போன்ற தொடர்புடைய ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் அறிவிக்கப்பட்ட தகவல்கள் பரிவர்த்தனை மற்றும் பொருட்களின் உண்மையான நிலையுடன் பொருந்துவதை உறுதி செய்ய முடியும்.
ஒரு வளாகம் சேமிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருந்தால், கலத்தல் அல்லது பொருளின் தரத்தை மாற்றுதல் போன்ற கூடுதல் செயல்பாடுகள், உரிமத்தின் வரம்பு, நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்.
அனைத்து செயல்பாடுகளும் துல்லியமாகப் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதோடு, தேவைப்படும்போது எழுத்துப்பூர்வ ஒப்புதல்கள் பெறப்படுவதையும் இயக்குநர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேரிடைம் நெட்வொர்க் நிறுவனம், திரெங்கானு மலேசியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய மலேசியாவின் பெட்ரோலிய மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல், மலேசியாவின் ஒழுங்குமுறைச் சூழலில் உள்ள இடைவெளிகள், இயக்கும் காரணங்களை கண்டறிதல் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார்.
முழுமையற்ற ஆவணங்கள் அல்லது பதிவுகளுக்கும் சரக்கின் உண்மையான நிலைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள், சரக்குகளின் அறிவிப்பு, ஒழுங்குமுறை இணக்கம், வரி விதிப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பக்கூடும் என்று மட்ஸ்லி கூறினார்.
பெறப்பட்ட, சேமிக்கப்பட்ட, கலக்கப்பட்ட, ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணெயின் அளவைக் கண்டறிந்து, தொடர்புடைய ஆவணங்களுடன் பொருத்துவதை உறுதிசெய்ய ஒரு விரிவான தணிக்கையும் முக்கியமானது.
எல்லை தாண்டிய வர்த்தகத்தில், பொருட்களின் தோற்றம், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சலுகை பெறுவதற்கான தகுதி ஆகியவற்றை, பொருட்களின் தோற்ற விதிகள், தொடர்புடைய துணை ஆவணங்களின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக, ஒவ்வொரு பரிவர்த்தனையும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்குவதை தொழில் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் இணக்கத்தின் அளவு, வரி தாக்கங்களை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளிடம் போதுமான பதிவுகள் இருக்க வேண்டும்.
முறையான ஒப்புதல், ஆவணங்களுக்கான தேவைகள் உட்பட, கலப்பு நடவடிக்கைகள் மீதான தெளிவான கட்டுப்பாடுகள், சுங்க அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான தகராறுகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமானவை என்று அவர் கூறினார்.
இதனிடையே முறையான ஒப்புதல், கண்காணிப்பு, தரநிலைகளுக்கு இணங்குதல், ஆவணங்கள் இல்லாமல் செய்யப்படும் எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஏனெனில் சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய சம்பவங்கள், அந்த நடவடிக்கையைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் நேர்மையைப் பாதிக்கக்கூடும் என்று கடல்சார் தொழில் நிபுணர் நசாரி காலித் கூறினார்.
அத்தகைய சம்பவம் நடந்தால், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்குதல், கண்காணிப்பின் செயல்திறன், எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளை அமல்படுத்துதல் ஆகியவை குறித்து கடுமையான கேள்விகள் எழும் என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு நடவடிக்கையும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும், நிறுவப்பட்ட விதிமுறைகள், சர்வதேச தரநிலைகள், சிறந்த நடைமுறைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, ஒப்புதல், ஆவண ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு நிபந்தனைகளுக்கு இணங்குதல் ஆகிய அம்சங்களுக்குக் கூர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுருத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2026, 4:24 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வாரா?
October 10, 2026, 4:23 pm
புகைமூட்டம்: எந்தப் பகுதியிலும் ஆரோக்கியமான காற்று மாசுபாடு குறியீட்டு அளவு பதிவாகவில்லை
October 10, 2026, 4:05 pm
லயோலா கல்லூரியில் படித்ததில் பெருமை கொள்கிறேன்: சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார் பெருமிதம்
October 10, 2026, 1:35 pm
யாரும் கண்காணிக்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை: டத்தோ வீரா ஷாகுல்
October 10, 2026, 10:13 am
