நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

வெளியே அணியும் காலணிகளுடன் வீட்டிற்குள் நுழைகிறீர்களா? - வெள்ளிச் சிந்தனை

சிலர் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது காலணிகளை கழற்றுவதில்லை. வாசலில் உள்ள மிதியடியில் துடைத்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். 

ஆனால் காலணிகளின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொருட்கள், கண்ணுக்குத் தெரிவதை விட மிகவும் ஆபத்தானவை.

வெளியே அணியும் காலணிகளுடன் வீட்டிற்குள் நுழையும்போது, ​​கண்ணுக்குத் தெரியாத மாசுக்கள், கிருமிகள் வீட்டுத் தரையில் பரவுகின்றன.

அழுக்கு, பாக்டீரியா, ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்கள் (allergens), பூச்சிகள், சாலைகளில் உள்ள கழிவுகள், விலங்குகளின் கழிவுகள் மற்றும் நுண் பிளாஸ்டிக்குகள் (microplastics) கூட இதில் அடங்கும்!

இந்தப் பிரச்சினை வாசலோடு முடிந்துவிடுவதில்லை. இந்தத் துகள்கள் ஓரிடத்தில் தங்குவதும் இல்லை. அவை மெல்ல மெல்ல தரைவிரிப்புகள் (carpets), வசிக்கும் இடங்கள் முழுவதும் பரவி அங்கேயே தங்கிவிடுகின்றன.

ஆபத்து என்னவென்றால், நம் குழந்தைகள் தரையில் விளையாடும் இடங்களில் இவை குவிகின்றன.

தரையில் தவழும் குழந்தையோ அல்லது தரை விரிப்பைத் தொட்டுவிட்டுத் தன் கைகளை வாயில் வைக்கும் குழந்தையோ, அந்த மாசுக்களை தெரியாமல் உட்கொள்ள நேரிடுகிறது.

தீர்வு மிகவும் எளியதுதான். வீட்டில் முக்கிய விதியை உருவாக்குங்கள்:

1. காலணிகள் வாசலிலேயே கழற்றிவைக்க வேண்டும்.

2. வீட்டிற்குள் அணிய சுத்தமான செருப்புகளை பராமரியுங்கள்.

3. வீட்டு வாசலைத் தொடர்ந்து சுத்தம் செய்யுங்கள். அதுவே பாதுகாப்பின் முதல் அரண்.

எங்கு தூய்மையை விரும்புகிறீர்களோ அங்கு காலணியை கழற்றுவது நல்லது.

மனித நடமாட்டம் இல்லாத பள்ளத்தாக்கில் மூஸா (அலை) அவர்களிடம் பேச விரும்பிய அல்லாஹ்வின் முதல் கட்டளையைப் பாருங்கள்:

"நானே உம்முடைய இறைவன்; உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடும். திண்ணமாக நீர் “துவா” எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்”. (20:12)

வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றும்போது, மனதில் இருக்கும் தேவையற்ற பிரச்சினைகளையும் அப்படியே வீட்டுக்கு வெளியே கழற்றினால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset