நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்

வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்று கட்டிபிடித்து சிரித்து விதவிதமாக போஸ் கொடுத்து நடத்தப்பட்ட  ஷோக்களெல்லாம் பிரயோஜனமின்றி போயிற்று.

ஐயோ பாவம் மோடி, பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் தன் இமேஜுக்கு ஒரு 'பில்டப்' தர முயன்றார், ஆனால், அது தகர்ந்துவிட்டது.

சர்வதேச உறவுகளில் பாதிக்கப்படும் நாடுகளின் பக்கத்தில் நின்று குரலற்றவர்களின் குரலாக இந்தியா வெளிப்பட்ட  காங்கிரஸ் ஆண்ட காலத்தில் அதற்கு மகத்தான உலக மரியாதை கிடைத்தது.

வல்லரசு நாடுகளை சார்ந்திராத தனித்துவத்தோடு சர்வதேச அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நாடாக இந்தியா விளங்கியதெல்லாம் கனவாய், பழங்கதையாகப் போய் அமெரிக்க, இஸ்ரேல் சார்பு நாடாக பிரிக்ஸ் மாநாட்டில்  இந்தியா வெளிப்பட்டத்தை எப்படி ரஷ்யா, சீனா, ஈரான் நாட்டுத் தலைவர்கள் ஏற்பர்?

சீன அதிபர் ஜி ஜின்பிங்க் பேசுகையில், ''வரலாற்றின் சரியான பக்கத்தில் நில்லுங்கள்…அது சர்வதேச பொது விதியை வலுப்படுத்தி, நீதியும், சமத்துவமும் கொண்டதாக உலகை மாற்றி அமைக்க உதவ வேண்டும்’’ என்று நேரடியாகவே மோடிக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து தான் பிரதமர் மோடி ஈரான் மீதான தாக்குதலுக்கான கண்டனத்தை மாநாட்டின் தீர்மானத்தில் இணைத்தார்.

ஆயினும் ஈரான் மீது வம்பாக குண்டுகளை வீசி சண்டைக்கிழுத்த இஸ்ரேல் பெயரையும், இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கி இன்னும் கூடுதல் தாக்குதலை செய்த அமெரிக்காவின் பெயரையும் தவிர்த்து, பொத்தாம் பொதுவான ஒரு கண்டனத் தீர்மானமாகவே அது இருந்தது.

இது இந்தியாவின் பக்க சார்பையும், கோழைத்தனத்தையும் அல்லவா காட்டுகிறது….?

அதே போல  இந்தியாவை அமெரிக்கா நிர்பந்தித்து,  ரஷ்யாவிடமும், ஈரானிடமும் ஆயில் வாங்காதே என்று இந்தியாவிற்கு கட்டளையிடும் போக்குகளை மனதில் கொண்டு தன் ஆதங்கத்தை ரஷ்ய அதிபர் புடின் சூசகமாக வெளிப்படுத்தினார். 

''வளர்முக நாடுகளின் மீதான வரிப்போர், பொருளதார அச்சுறுத்தல்கள், தேவையற்ற தடைகள், உள் நாட்டு விவகாரங்களில் தலையீடு போன்றவற்றை செய்யும் சில நாடுகளால் உலக அரங்கில் பதற்றங்களும், மோதல்களும் அதிகரிக்கின்றன…என்பதை குறிப்பிட்ட ரஷ்ய அதிபர் புடின் சமத்துவம், நல்லுறவு, ஒருவர் நலனை மற்றவர் மதிக்கும் போக்கு ஆகியவற்றை போற்றி வளர்க்க வேண்டும்’’ என இந்தியாவிற்கு மறைமுகமாக உணர்த்தினார்.

மோடி உணர்ந்திருப்பாரா, தெரியவில்லை!

ஆனால், உலக நாட்டுத் தலைவர்களை கட்டிப் பிடிப்பதிலும், கைகுலுக்கி போஸ் கொடுப்பதிலும் தான் அக்கறை காட்டினாரேயன்றி, இந்தியாவின் சுய சார்பையும், தன்மானத்தையும் பாதுகாக்கும் உறுதிப்பாடு மோடியிடம் சுத்தமாக இல்லை. 

மோடியிடம் இல்லாவிட்டாலும், அது இந்திய மக்களிடம் உள்ளது என்பது சர்வதேசத் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் பெரும்பாலான மக்கள் சமத்துவத்தையும், சர்வதேச அமைதியையும் விரும்புவர்கள் என்பதால் தான் மோடிக்கு மரியாதையே அன்றி, வேறெந்த விஷேச தகுதியும் அவருக்கில்லை.
 
- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset