செய்திகள் சிந்தனைகள்
மலேசியப் பிரதமரின் தந்தி TV பேட்டி - மகாதீர் குறித்தும் விஜய் குறித்தும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கருத்து ஒரு விமர்சனப் பார்வை
கட்டுரையாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக சட்டப் பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் ஆவார். சட்டமன்றத்தில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எழுப்பி அதற்கான தீர்வுகளைக் காண பல்வேறு முயற்சியிக் ஈடுபாடு காட்டுபவர். சமீபத்தில் இந்தியாவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் கல்ந்துகொள்ள சென்ற மலேசியப் பிரதமரின் வருகை குறித்து அவரது கண்ணோட்டத்தை இங்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த 14.09.26 அன்று தந்தி தொலைக்காட்சியில் நெறியாளர் திரு. ஹரிகரன் அவர்கள் மலேசிய பிரதமர் திரு. அன்வார் இப்ராஹிம் அவர்களோடு தந்தி தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலை நடத்தி இருந்தார்.
அவரது இந்திய வருகையில் தலைநகர் டெல்லியும், கேரளாவும் இடம்பெற்று இருந்த நிலையில்; தமிழ்நாட்டுக்கும் அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
அவரது வருகையின் மூலமாக தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் குவியும் என்றும்; தமிழ்நாடு மற்றும் மலேசியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு இடையில் மேலும் கலாச்சார பரிவர்த்தனைகளை மற்றும் சுற்றுலா இணைப்புகளை அது வலிமைப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது வருகைக்கு உரிய முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசும்; முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும் தரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நேர்காணலில் அது குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.
அப் பேட்டியில் அன்வார் இப்ராஹிம் அவர்களின் சர்வதேச அரசியல் பார்வை குறித்தும், இந்தியா குறித்தும்-குறிப்பாக தமிழ்நாடு குறித்தும்; அவருக்கு இருக்கும் ஆழமான புரிதல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அவரது பேட்டி இருந்தது.
தமிழ்நாடு ஒரு பெரிய மக்கள் தொகை கொண்ட, பெரிய மாநிலம் என்று கூறியவர், திருக்குறள் குறித்தும் கூறினார்.
முன்பு தனது பட்ஜெட் உரையில் அவர், திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டியதையும் குறிப்பிட்டார்.
நேர்மை, ஒழுக்கத்தை திருக்குறள் போதிக்கிறது என்றும் தமிழ்நாடு ஒரு நாகரீக கலாச்சாரத்தை தந்திருக்கிறது என்றும் கூறியவர் திருக்குறளை மலாய் மொழியிலும் மொழிபெயர்க்க கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் பெரும்பாலும் தமிழர்களாக இருப்பதால் அவர்கள் தமிழக அரசிலை மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வருவதாகவும் கூறினார்.
கலைஞர், ஜெயலலிதா அம்மா, தளபதி ஸ்டாலின் அவர்களையும் தனது பேட்டியில் குறிப்பிட்டவர்,
முன்னாள் பிரதமர் மகாதீர் அவர்களுடன் சென்னைக்கு ஒரு முறை வந்திருந்த போது எம்ஜிஆர் அவர்கள் வீட்டு சாப்பாட்டை அனுப்பி இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், A.R. ரஹ்மான், இளையராஜா ஆகியோருடன் உள்ள தொடர்பு குறித்தும், சந்திப்புகள் குறித்தும் அவர் கூறினார்.
மலேசிய அரசியலில் தமிழர்கள் கலாச்சாரம், கல்வி, வியாபாரம் எல்லாவற்றிலும் செல்வாக்கோடு உள்ளதாக குறிப்பிட்டவர் தனிப்பட்ட முறையில் தனக்கு ஆதரவாக அவர்கள் இருப்பதாகவும் கூறினார்.
தனக்கு நெருக்கமான தமிழ் நண்பர்கள் தமிழ்நாடு அரசியல் குறித்து தன்னிடம் விவாதிப்பார்கள் என்றும், தமிழ்நாடு அரசியலைத்தான் அதிகமாக விவாதிப்பார்கள் என்றும் கூறினார்.
முதல்வர் விஜய் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் அவர் சரளமாகப் பதிலளித்தார்.
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்ற அவரது விருப்பத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் அலட்சியப்படுத்தினார் என ஊடகங்கள் விவாதித்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அதை நாகரிகமாக மறுத்துவிட்டார்.
ஒரு முதிர்ச்சியான, சர்வதேச அரசியல் அறிவு கொண்ட ஒரு ஆளுமை- என்பதை அதன் மூலம் அவர் மீண்டும் நிரூபித்தார் எனலாம்.
முதல்வர் விஜயின் அரசியலில் தொடக்கமும், வேகமும் நன்றாக உள்ளது என்று கூறியவர்; அதிகாரத்தில் இருக்கும் போது வரும் சவால்களை எதிர்கொள்ள நிதானம் தேவை என்றும் விவேகத்தை தக்க வைக்க வேண்டும் என்றார்.
முதல்வராக திரு. விஜய் அவர்கள் பொறுப்பேற்றதும் முதலில் வாழ்த்து தெரிவித்த ஒரு வெளிநாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் தான் என்பது கவனிக்கத்தக்கது.
வாக்குறுதியை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல என்றும் நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும்; அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு விடக்கூடாது என்றும் அவரிடம் கூறியதாகவும் கூறினார்.
அவரது ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்? என்று நெறியாளர் கேட்டப்பபோது, நீதி, உறுதியான கொள்கை, உயர்ந்த லட்சியம், நல்லாட்சிக்கான நம்பிக்கை குரலாக பார்ப்பதாக கூறினார்.
எந்த இடத்திலும் தனது வருகையை அவர் அலட்சியப்படுத்தி விட்டார் என்ற ஊடகங்களின் உணர்வுகளை தனது குரலில் அவர் எதிரொலிக்கவே இல்லை.
அதுதான் உயர்ந்த ஒரு தலைவருக்கான இலக்கணம் போலும்.
டெல்லியில் இருந்து கேரளா வந்த பிறகு; தான் மாலத்தீவு செல்ல இருந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து தேதி அட்ஜெஸ்ட் செய்வது குறித்து இரு தரப்பும் பேசியதாகவும் விஜய் அவர்கள் பயண திட்டமிடலில் இருந்ததால் தான் திட்டமிட்டப்படி மாலத்தீவுக்கு செல்ல வேண்டி வந்ததாகவும் அவர் பதிலளித்தார்.
அவரது கருத்துகளை தங்களுக்கு சாதகமாக பகிர்ந்து கொண்டாடினர்கள் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் ரசிகர்கள்.
அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் மகிழ்வுடன் வாழும் ஒரு நாட்டின் பிரதமர் நமது முதல்வரை பாராட்டி இருக்கின்றார்.
அதை வரவேற்கும் விதமாக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் ஒரு ட்விட்டர் பதிவு கூட போடவில்லையே... என்ற மலேசியத் தமிழர்களின் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் ஏனோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அதை அவர்கள் தலைமையும் அவர்களும் புரிந்து கொள்ளும் அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் இல்லையா? என்றும் தெரியவில்லை.
முதல்வர் விஜய் அவர்களை மலேசியாவில் வாழும் தமிழர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய திரை நட்சத்திரமாக கொண்டாடினாலும் தங்களின் சிறப்புக்குரிய பிரதமராக அவர்கள் அன்வார் இப்ராஹீமை கொண்டாடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
இந்தியாவின் மீதும் தமிழர்களின் மீதும் மாசற்ற அன்பு வைத்திருக்கும் நேச நாட்டின் பிரதமர் ஒருவரை ஏதாவது ஒரு வகையில் நேரம் ஒதுக்கி நம்முடைய முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்து இருக்க வேண்டும்.
ஏனெனில் அது மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு ஒரு வகையில் நன்மை செய்வதாகவும் இருந்திருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது!
இப் பேட்டியில் நெறியாளர் ஹரிஹரன் அவர்கள், பல்வேறு சர்வதேச கேள்விகளை எழுப்பும்போதும் தனக்கே உரிய உலக அரசியல் அறிவுடன் அன்வார் இப்ராஹிம் பதில் அளித்தார்.
ஏனெனில் நெறியாளர் ஹரிஹரன் சர்வதேச அரசியலை உற்றுநோக்கும் ஒரு தமிழ்நாட்டு பத்திரிகையாளர்.
பல ஆசிய நாட்டு தலைவர்களை அவர் பேட்டி எடுத்திருக்கிறார்.
முன்பு மலேசியாவின் பிரதமராக மகாதீர் முஹம்மது அவர்கள் இருந்தபோது, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக CAA, NRC, NPR குறித்த போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. அந்த நேரத்தில் சில பேட்டிகளில் மகாதீர் அவர்கள் கூறிய கருத்துக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக கூறப்பட்டது.
அதுபோல் நெறியாளர் ஹரிஹரன் அவர்கள் மகாதீர் முஹம்மது அவர்களுடன் எடுத்த ஒரு பேட்டியில், அவரது சில கருத்துகளும் சர்ச்சைக்கு உள்ளானது.
தற்போது அது குறித்த அவரிடம் மகாதீர் குறித்து கேள்வி கேட்டார்.
மலேசியாவின் உள்நாட்டு அரசியலை கவனத்தில் கொண்டு மகாதிருக்கு எதிராக கருத்து கூறுவார் என எதிர்பார்த்தேன்.
ஆனால் நேர் மாற்றமாக அவரது பதில் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
மகாதீர் தன் கடமைகளை செய்தார் என்றும் அது இங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அந்த விரிசலை தற்போது சரி செய்வதாகவும் அவர் கூறிய போது ஆச்சரியப்பட்டேன்.
அவருக்கும், மகாதீருக்கும் கடந்த 30 ஆண்டுகளில் கடுமையான அரசியல் பகை ஏற்பட்டது.
இடையில் அது சற்று தணிந்திருந்தாலும் அந்த வருத்தங்கள் மறையவில்லை.
ஆனால் எந்த இடத்திலும் அவர் தனது அரசியல் குருவான மகாதீரை தனது நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் அவர் விட்டுக் கொடுக்காமல் பேசினார்.
இதை நமது நாட்டு அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
தாய்லாந்து, கம்போடியா இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து நெறியாளர் கேள்வி கேட்டப்போது அதை தீர்த்து வைக்க தான் எடுத்து முயற்சிகளைப் பற்றியும் கூறினார்.
தென்கிழக்கு ஆசியாவில் அமைதி நிலவ தொடர்ந்து முந்தைய மலேசியப் பிரதமர் நஜீப் அவர்களும், அதனைத் தொடர்ந்து அன்வார் இப்ராஹிம் அவர்களும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய கிழக்கில் நடைபெறும் போர் குறித்து கேள்விக்கு நியாயமான- தெளிவான பதில்களை சமாசமின்றி கூறினார்.
இஸ்ரேல் எந்த தீர்வையும் ஏற்க மறுக்கிறது என்பதை சுட்டிக் காட்டியவர்; அங்கு சூறையாடப்பட்ட மக்களின் படுகொலை செய்யப்பட்ட மக்களின் மதிப்பு குலைக்கப்பட்ட மக்களின் உணர்வுகளோடு பலஸ்தீனர்களின் போராட்டத்தை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அப்பட்டமான அநீதி நாடுகளின் உரிமை பறிப்பை உலகம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்றார்.
நியாயமான- மனசாட்சி உள்ள தீர்வு பாலஸ்தீனத்திற்கு வேண்டுமென்றார்.
ஹமாஸ் குறித்து எதிர்மறையான ஒரு கேள்வியை நெறியாளர் முன்வைத்த போது ஹமாஸ் 30 வருடங்களுக்கு முன்பாகத்தான் வந்தது. ஆனால் 70 ஆண்டுகளாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறதே என்று பதில் அளித்தவர், அங்கு தினமும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஏன் பேசவில்லை என்றார்.
அவரது பதில் மனசாட்சியின் குரலாக எதிரொலித்து எனலாம்.
ஹர்மோஸ் நீரிணைப் பகுதியை ஈரான் கட்டுப்படுத்துவது குறித்த நெறியாளரின் கேள்விக்கு பதில் அளித்தவர், ஈரான் மீது முதலில் குண்டு வீசியது யார்? இஸ்ரேலின் துணையுடன், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா குண்டு வீசியது சரியா? என கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய நாடுகள் சபை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தவர், பல பத்தாண்டுகளாக ஐக்கிய நாட்டு சபையின் சீர்திருத்தம் பற்றி தான் பேசி வருவதாகவும்; ஐ.நா.வில் இந்தியா இடம்பெற வேண்டியது குறித்தும் அவர் பதில் அளித்தார்.
மேலும் அணிசேரா நாடுகள் குறித்து விரிவாக பேசியவர், ஐ.நா சபையில் ஜனநாயகத்தின் ஜனநாயக அடிப்படை பிரதிநிதித்துவங்கள் தேவை என்றும், இந்தியாவுக்கு அதற்கான வாய்ப்பு தர வேண்டும் என்ற அழுத்தமாக பேசினார்.
இந்த பேட்டியின் மூலமாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனிக்கும் ஆசிய தலைவர்களில் ஒருவராக அன்வார் இப்ராஹிம் மீண்டும் தன்னை உறுதிப் படுத்தியிருக்கிறார்.
தொகுப்பு: ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
