நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அச்சுறுத்தல்களை அனுப்பியது யார்?; கேப்ரைஸ் வழக்கு மேற்கொண்டு நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், தொழிலதிபர் போலிசாரின் பதில்களைக் கோருகிறார்

கோலாலம்பூர்:

சமூக ஊடகப் பிரபலம் கேப்ரைஸ், அவரது குடும்பத்தினருக்கு எதிராக விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்ட கடல்சார் தொழில்துறையைச் சேர்ந்த டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன், அந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் யாரேனும் அடையாளம் காணப்பட்டுள்ளார்களா என்பதை அறிய விரும்புகிறார்.

மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கேப்ரைஸ் தனக்கு எதிராகப் புகார் அளித்து ஓராண்டு ஆகிவிட்டது.

இந்த வழக்கு மேற்கொண்டு நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்படுவதற்கு முன்பு பல மணிநேரம் போலிசாரால் விசாரிக்கப்பட்டதால், அதன் முடிவைத் தெரிந்துகொள்வது தனக்கு முக்கியம் என்று கூறினார்.

கேப்ரைஸின் புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரித்தது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்.

நான் அதிகாரிகளைக் கேள்வி கேட்கவில்லை.

ஆனால் நான் போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால், இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

இந்தக் குற்றச்சாட்டு என் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாலும், சங்கடத்தை ஏற்படுத்தியதாலும் மிகவும் தீவிரமானதாகும்.

கடந்த ஆண்டு விசாரணையின்போது காவல்துறை என்னிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது.

ஆனாலும் அதன் பின்னர் என் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

எனவே, இந்த வழக்கில் என்ன நடந்தது மற்றும் யார் மீதாவது குற்றம் சாட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்குத் தெளிவு வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க எத்தனை பேர் அழைக்கப்பட்டனர்?என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

கூறப்படும் அச்சுறுத்தல் செய்திகளுக்குப் பின்னால் உள்ள நபர் அல்லது நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறு கேப்ரைஸ், போலிசாருக்கு டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அழைப்பு விடுத்தார்.

அதிகாரிகளின் முடிவில் தலையிட தான் முயற்சிக்கவில்லை. ஆனால் இந்த வழக்கு எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது குறித்த தெளிவான விளக்கத்தையே விரும்புவதாக அவர் வலியுறுத்தினார்.

அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு இன்ஸ்டாகிராம் செய்தி தொடர்பாக, கேப்ரைஸ் ஜூலை 10 அன்று போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 507-ன் கீழ் விசாரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில், விசாரணை ஆவணங்கள் சிலாங்கூர் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை ஏதுமில்லை என வகைப்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், கேப்ரைஸ் பல இன்ஸ்டாகிராம் பதிவுகளை வெளியிட்டார்.
அவற்றில் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் இடம்பெற்றிருந்தன.

நம்பகமான ஆதாரங்கள் ஏதுமின்றி, அந்த வர்த்தகரை பல்வேறு குற்றச் செயல்களுடன் அப்பதிவுகள் தொடர்புபடுத்தியதாகக் கூறப்பட்டது.

தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகவும், நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறி, கேப்ரைஸுக்கு எதிராக டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் விசாரணை, இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset