நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாக்கும் அமைச்சர் ஸ்டீவன் சிம் நிலைப்பாட்டிற்கும், அமைச்சரவையின் முடிவையும் மைக்கி ஆதரிக்கிறது: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர்:

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாக்கும் அமைச்சர் ஸ்டீவன் சிம் நிலைப்பாட்டிற்கும், அமைச்சரவையின் முடிவையும் மைக்கி முழுமையாக ஆதரிக்கிறது.

மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை கூறினார்.

புதிய குறைந்தபட்ச ஊதிய விகித உயர்விலிருந்து சிறு, குறு, நடுத்தர  நிறுவனங்களுக்கு தற்போதைக்கு விலக்கு அளிக்க அமைச்சரவை எடுத்துள்ள முடிவை மைக்கி வரவேற்கிறது.

இந்த முடிவு, தற்போது செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பு, பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் உள்ளூர் தொழில்முனைவோரின் நிலை குறித்து அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது. 

இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தங்களது நிதி நிலையை வலுப்படுத்தவும், பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், வணிக வளர்ச்சியைத் தொடரவும் தேவையான கால அவகாசம் கிடைக்கும்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்தியதுடன், பணியாளர்களின் வருமானம், நலன்களை மேம்படுத்தும் நோக்கத்திற்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்த அமைச்சர்  ஸ்டீவன் சிம்மின் முயற்சியை மைக்கி பாராட்டுகிறது.

மைக்கியின் பார்வையில், முதலாளிகளின் செயல்திறனும் பணியாளர்களின் நலனும் ஒன்றாக வலுப்படுத்தப்பட வேண்டும். 

நிலைத்தன்மையுடன் செயல்படும் வணிக நிறுவனங்கள், நிலையான வேலைவாய்ப்புகளை வழங்கவும், பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், மேலும் நியாயமான ஊதியத்தை வழங்கவும் சிறந்த திறனைக் கொண்டிருக்கும்.

இதனைத் தொடர்ந்து, முற்போக்கான ஊதியக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் ஊதிய மானிய ஆதரவின் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவன பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையையும் மைக்கி ஆதரிக்கிறது.

ஊதிய உயர்வை உற்பத்தித்திறன் அதிகரிப்புடன் இணைக்கும் இந்த அணுகுமுறை, நிறுவனங்கள் தங்களது செயல்திறனை மேம்படுத்துவதோடு, பணியாளர்களின் வருமானத்தையும் நிலையான முறையில் உயர்த்த உதவும்.

இந்த நடவடிக்கையை செயல்படுத்தும்போது, சிறு, குறு, நடுத்தர  நிறுவனங்களுக்கான தகுதி, விலக்கின் வரம்பு மற்றும் ஊதிய மானியத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று மைக்கி பரிந்துரைக்கிறது.

எளிமையான விண்ணப்ப செயல்முறையும், விரிவான விளக்கங்களும் வழங்கப்படுவது, தொழில்முனைவோர் தங்களுக்கு வழங்கப்படும் ஆதரவைப் புரிந்துகொண்டு அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.

தொழில்முனைவோர் மேம்பாடு,  கூட்டுறவு அமைச்சு, தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, தங்களது உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கும், வணிக சமூகத்திடமிருந்து கருத்துகளைப் பெற்றுத் தெரிவிப்பதற்கும் மைக்கி தயாராக உள்ளது.

அமைச்சர் ஸ்டீவன் சிம் முன்வைத்துள்ள சமநிலையான அணுகுமுறை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாட்டைப் பாதுகாக்கவும், உள்ளூர் நிறுவனங்களின் போட்டித்திறனை வலுப்படுத்தவும், பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று மைக்கி நம்புகிறது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாட்டில் அக்கறையும் ஆதரவும் வழங்கியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் மைக்கி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset