நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈஜோக்கில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: கோகிலா

ஈஜோக்:

ஈஜோக்கில் நடந்ததாக கூறப்படும் கொள்ளைச் சம்பவத்துக்கும், தங்களது கடைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

எம்ஜி கேஷ் என் கேரி கடையின் உரிமையாளர் கோகிலா இதனை தெரிவித்துள்ளார்.

ஈஜோக்கில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தை தங்களது கடையுடனும், தங்களுடனும் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள், காணொளிகள் பரவி வருவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றி அவதூறான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில், வேறொரு கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தங்களது கடையில் பணியாற்றி வரும் ஒருவர் தொடர்புபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கோகிலா தெரிவித்தார்.

அந்த நபரிடம் காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளதாகவும், எனவே இந்த விவகாரம் தொடர்பாக உண்மையான தகவல்கள் தெரியாமல் தங்களது கடையையும் தங்களையும் சம்பந்தப்படுத்தி கருத்துகள் தெரிவிப்பதையோ அல்லது அவதூறுகளைப் பரப்புவதையோ தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

விவரங்கள் முழுமையாக தெரியாமல் சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பகிர்வதும், எங்களைப் பற்றி அவதூறாக பேசுவதும் எங்களது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அவதூறுகளைத் தொடர்ந்து பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோகிலா எச்சரித்தார்.

தாங்கள் குறித்த வட்டாரத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து வியாபாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நீண்டகால வியாபாரப் பயணத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தங்களது வியாபாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே தற்போது தங்களைப் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகள் பரப்பப்படுவதாக தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை உண்மை என நம்பி பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யுமாறும், சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகள் அதிகாரிகளின் கவனத்தில் இருப்பதால் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் கோகிலா கேட்டுக்கொண்டார்.

மேலும், தங்களது கடையின் பெயருக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset