நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ சரவணன் தயாராக இருந்தும் அரசுத் தரப்பு தயாராக இல்லை: நவம்பர் 3க்கு வழக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்:

தமக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ள முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தயாராக இருந்தும் அரசுத் தரப்பு தயாராக இல்லாதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தாம் எதிர்கொள்ளும் ஊழல் வழக்கின் விசாரணைத் தேதியை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

ஆனால் அரசு வழக்கறிஞர்கள் தரப்பு தாங்கள் அதற்கு இன்னும் தயாராக இல்லை எனத் தெரிவித்தனர்.

இன்று காலை செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அஸ்ருல் தாரஸ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக டத்தோஸ்ரீ சரவணனுக்கு எதிரான போதுமான ஆவணங்கள் தயார் செய்ய அரசுத் தரப்பு கால அவகாசம் கோரியது.

டத்தோஸ்ரீ சரவணன் சார்பில் வழக்கறிஞர் டத்தோ கீதன் ராம் வின்சென்ட், லாவனியா ராஜாவுடன் ஆஜரானார்.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் பி. ரூபினி ஆஜரானார்.

விசாரணையின் போது, ​​அரசுத் தரப்பிடம் விசாரணைத் தேதியை நிர்ணயிக்க ஏன் இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது என்றும், ஏன் தயாராக இல்லை என்றும் நீதிபதி கேட்டார்.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த வழக்கறிஞர் ரூபினி, இந்த வழக்கு தொடர்பான இரண்டு ஆவணங்கள் அரசுத் தரப்புக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

பின்னர் வழக்கறிஞர் கீதன் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், விசாரணைத் தேதிக்கு முன்பு எந்த நேரத்திலும் அவற்றைச் சமர்ப்பிக்கலாம் என்றும் எதிர் தரப்புக்குத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இரண்டு ஆவணங்களையும் சமர்ப்பிப்பதற்கும் விசாரணைத் தேதியை நிர்ணயிப்பதற்கும் நீதிமன்றம் நவம்பர் 3ஆம் தேதியை நிர்ணயித்தது.

அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக, மொத்தம் 1.097 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மூன்று கையூட்டுகளை பெற்றதாக சரவணன் மீது ஆகஸ்ட் 28 அன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset