நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1992-ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை அணிக்கு டாக்டர் ஹஸ்மா ஒரு 'தாய் ஸ்தானத்தில்' திகழ்ந்தார்: ரசிஃப் சிடெக் புகழாரம் 

கோலாலம்பூர்:

மலேசிய பேட்மிண்டன் குடும்பத்திற்கு, குறிப்பாக 34 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் 25 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்து அந்தப் புகழ்பெற்ற கோப்பையை வென்ற 1992 தாமஸ் கோப்பை (Thomas Cup) அணி உறுப்பினர்களுக்கு, துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹம்மது அலியின் மறைவு ஒரு பேரிழப்பு என்று தேசிய பேட்மிண்டன் ஜாம்பவான் டத்தோ ரசிஃப் சிடெக் வர்ணித்தார்.

1992 தாமஸ் கோப்பை அணிக்குத் தலைமை தாங்கிய ரசிஃப், மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் (BAM) புரவலராக இருந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா, அணிக்கு வெறும் ஆதரவாளராக மட்டுமல்லாமல், எப்போதும் தங்களுக்கு நெருக்கமாகவும் தங்கள் பயிற்சிகள் குறித்து அக்கறை கொண்டவராகவும் ஒரு தாயைப் போலத் திகழ்ந்ததாகக் கூறினார்.

"அக்காலத்தில் அவரை நாங்கள் தாமஸ் கோப்பை அணியின் தாயாகவே கருதினோம். சில சமயங்களில், அவர் எங்கள் பயிற்சி அமர்வுகளுக்கு வந்து, எங்களைச் சந்தித்து உரையாடி, ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்குவார்.

"1992-ல் ஸ்டேடியம் நெகாராவில் மலேசியா தாமஸ் கோப்பையை வென்றபோது அவர் ஆற்றிய பங்களிப்பை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்," என்று இன்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

தாமஸ் கோப்பையை வென்ற இனிமையான நினைவைத் தவிர, அதே ஆண்டில் நடைபெற்ற பார்சிலோனா ஒலிம்பிக்கில் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அளித்த ஆதரவையும் ஒருபோதும் மறக்க முடியாது என்று ரசிஃப் கூறினார்; அந்த ஒலிம்பிக்கில்தான் அவரும் அவரது தம்பி டத்தோ ஜலானி சிடெக்கும் நாட்டின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தனர்.

பார்சிலோனாவில் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் வருகை தேசிய பேட்மிண்டன் வீரர்களுக்கு, குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள் முழுவதும் அவர் வழங்கிய ஆதரவு, ஊக்கத்தின் காரணமாக மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது என்று அவர் கூறினார்.

"அவரது வருகை ஜலானிக்கும் எனக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது; மேலும் ஒலிம்பிக்கில் போட்டியிட எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தையும் அளித்தது.

"அல்ஹம்துலில்லாஹ், அக்காலத்தில் எங்களால் நாட்டின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை நாட்டிற்குக் கொண்டுவர முடிந்தது," என்று கூறிய ரசிஃப், கடந்த ஆண்டு துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவை கடைசியாகச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவியான துன் டாக்டர் சித்தி ஹஸ்மா, இன்று காலை தேசிய இதயக் கழகத்தில் (IJN) தனது 100-வது வயதில் காலமானார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset