நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகங்கள் செய்தியை மட்டும் பதிவு செய்வதில்லை; ஒரு சமூகத்தின் வரலாற்றையே பதிவு செய்கிறது: சிவமலர்

கோலாலம்பூர்:

ஊடகங்கள் செய்தியை மட்டும் பதிவு செய்வதில்லை. ஒரு சமூகத்தின் வரலாற்றையே பதிவு செய்கிறது.

கெஅடிலான் கட்சியின் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவமலர் கணபதி இதனை கூறினார்.

இன்று கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தில் இறைவழிபாட்டில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, மலேசியத் தமிழ் ஊடகச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தின் தொடக்க நிகழ்விலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

தகவல் தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள்  இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

பல தலைமுறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்து உரையாடியது மனதை நெகிழச் செய்தது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் குரலை வெளிக்கொணர்வதற்காகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகளையும் பிரச்சினைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும் அவர்கள் மேற்கொண்ட உழைப்பும் தியாகமும் அளப்பரியவை.

ஊடகம் என்பது வெறும் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு துறை அல்ல. அது ஒரு சமூகத்தின் கண்கள், காதுகள், குரல்.

ஒரு நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள்
என்ன செய்கிறார்கள் என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகம்.

அதே நேரத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் ஊடகம்தான்.

ஒரு நல்ல பத்திரிகையாளர் செய்தியை மட்டும் எழுதுவதில்லை. அவர் சமூகத்தின் நினைவுகளைப் பாதுகாக்கிறார்.
அதிகாரத்தைக் கேள்வி கேட்கிறார்.

குரல் இல்லாதவர்களுக்கு குரலாகிறார்.
சில நேரங்களில் வரலாற்றையே எழுதுகிறார்

தமிழ் ஊடகத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும், நமது நாட்டிற்கும் இதுவரை பத்திரிகையாளர்கள் ஆற்றிய பணிகளுக்கு, இனி அவர்கள் ஆற்றவிருக்கும் பணிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்.

தமிழ் ஊடகமும் தமிழ் மொழியும் தொடர்ந்து வளர, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று சிவமலர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset