நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

தண்டனைக் குறைப்பு, மன்னிப்பு வழங்குவது அல்லது தண்டனையை ஒத்திவைப்பது போன்றவை கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் மாமன்னருக்கு அளிக்கப்பட்டுள்ள பிரத்யேக அதிகாரமும் விருப்ப உரிமையுமாகும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலைப்பாடு மிகவும் தெளிவாகவும், நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு உட்பட்டும் உள்ளது.

மன்னிப்பு வழங்கும் விவகாரங்களில் மாமன்னரின் அதிகார வரம்பை கூட்டரசு அரசியலமைப்பு தெளிவாக வரையறுத்துள்ளது.

எனவே, இந்தச் செயல்முறையின் மூலம் எடுக்கப்படும் முடிவை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டு மதிக்க வேண்டும் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மன்னிப்பு வழங்கும் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் ரமணன் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், ஊழல், தவறான நடத்தைகளுக்கு எதிரான போராட்டம் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்படும்.

பிரதமரின் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடும் இதுவே, இந்த நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு, 2028 ஆகஸ்ட் 23 வரை எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுச் சிறையில் கழிப்பதற்கான நிபந்தனையுடனான மன்னிப்பை மாமன்னர் நேற்று வழங்கியிருந்தார்.

பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா கூட்டரசு பிரதேசங்களுக்கான 64-வது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் இந்த உத்தரவு தீர்மானிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset