நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் - விஜய் சந்திப்பு; கால அட்டவணை முரண்பாட்டை அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது: மைக்கி

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும் இடையே முன்மொழியப்பட்ட சந்திப்பு தொடர்பாக எழுந்துள்ள தேவையற்ற ஊகங்கள் குறித்த டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அவர்கள் வழங்கிய விளக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

இதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கால அட்டவணை முரண்பாட்டை அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது.

மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக புதுடில்லியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். 

அதேவேளையில், முதலமைச்சர் விஜய் லண்டனில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இரு தலைவர்களுக்கும் அவரவர் பொறுப்புகளுக்கு ஏற்ப முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட முக்கிய கடமைகளும் நிகழ்ச்சிகளும் உள்ளன.

புதுடில்லியில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிகழ்ச்சி நிரலில், ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான முக்கிய சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, மலேசியா–இந்தியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடல்களில் மலேசியாவின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக முக்கியத்துவம் வாய்ந்த குறைக்கடத்தித் தொழில்துறை, விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு, திறனாளர் மேம்பாடு, இருதரப்பு முதலீடுகள் மற்றும் மலேசிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இடம்பெற்றன. 

இத்தகைய ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மலேசியத் தொழில் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, முதலீடுகளை ஈர்த்து, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான பங்களிப்பை வழங்கக்கூடியவை.

மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில், மலேசியா–இந்தியா பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளை நான் வரவேற்கிறேன். 

இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த, வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய சந்தையாகத் திகழ்கிறது. இருநாடுகளுக்கிடையேயான வலுவான ஒத்துழைப்பு மலேசியத் தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு, குறிப்பாக மலேசிய இந்திய வணிகச் சமூகத்தினருக்கு, மேலும் பல வாய்ப்புகளைத் திறந்துவிடும்.

எனவே, இந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இரு தலைவர்களுக்கிடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடியாமல் போனதைத் திரித்துக் கூறவோ, தவறாகச் சித்தரிக்கவோ அல்லது பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை இருப்பதாகப் பொய்யான தோற்றத்தை உருவாக்கவோ கூடாது.

குறிப்பாக பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் கருத்துத் தெரிவிப்பவர்கள், உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்புவதையும் இரு தலைவர்களின் கால அட்டவணைகளை வேண்டுமென்றே தவறாகப் பொருள்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset